Published : 16 Dec 2017 05:51 PM
Last Updated : 16 Dec 2017 05:51 PM

‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ – அஸ்ஸாமின் கிராமத்திற்கு ஒரு பயணம்

இந்தியாவின் கிராமங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கிறதா? அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அவர்களுக்கு சென்று சேருகிறதா? அவர்களது வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது? என்ற கேள்விகளை ஒரு சிறுமியை மையக்கதாபாத்திரமாக்க் கொண்ட வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் திரைப்படத்தின் மூலம் சத்தமில்லாமல் அதே நேரத்தில் அழுத்தமாக முன்வைக்கிறார் இயக்குநர் ரிமா தாஸ். படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்துமே இவர்தான்.

அஸ்ஸாமின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் துனுவிற்கு தனது கிராமத்தில் ஒரு மியூசிக்கல் பேண்ட் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது ஆசை. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் துனு மியூசிக்கல் பேண்ட்டை உருவாக்கினாளா? இல்லையா? என்பதே வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். படத்தின் ஒன்லைனை கேட்கும்பொழுது ஆங்கிலபடங்கள் பலவற்றின் நினைவுகள் வரலாம். ஆனால் படத்தினை பார்க்கும்பொழுது இந்தியாவிலிருந்து உலகத்தரமான ஒரு திரைப்படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வைத் தவிர வேறெதுவும் தோன்றாது. ஒவ்வொரு கதையையும் திரைக்கதையின் மூலம் சுவாரசியமானதாக மாற்றமுடியும் என திரைக்கதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய சினிமாக்களின் மத்தியில் வில்லேஜ் ராக்ஸ்டாரின் திரைக்கதை பெரிதாக ஒன்றுமில்லை. மிக இயல்பாக அந்த சிறுமியை சுற்றியும் அந்த கிராமத்து சிறுவர்கள், மக்களைச் சுற்றியும் காட்சிகள் நகர்கின்றன. மிகப்பெரிய திருப்பங்களோ, பரபரப்போ துளியும் படத்தில் இல்லை. அதனால்தான் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் ஒரு அற்புதமான திரைப்படமாக மாறியிருக்கிறது போலும்.

விதவையான அம்மாவுடன் வாழும் துனுவின் கதாபாத்திரம் மிக இயல்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனது ஆசைகளை நிறைவேற்ற சிறுவர், சிறுமியர் என்னவெல்லாம் செய்வார்களோ அதையேதான் துனுவும் செய்கிறாள். எந்தவொரு அதிகப்படியான செயல்களும் துனுவிடம் இல்லை. அம்மாவிற்கு உதவுகிறாள், எப்போது ஆண்பிள்ளைகளுடனே விளையாடுகிறாள், சேட்டைகள் செய்கிறாள், தனது ஆசையான மியூசிக் பேண்ட்டிற்காக காசு சேர்க்கிறாள் இப்படி துனு மட்டுமில்லாமல் படத்தில் வரும் வேறு சிறுவர்களும், மற்ற கதாபாத்திரங்களும் அதனளவில் மிக இயல்பாகவே இருக்கின்றனர்.

ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வழியாகவும் காட்சிகளின் மூலமாகவும் அஸ்ஸாமின் சிறிய கிராமத்தின் நிலவியல் தன்மைகளையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் பதிவு செய்துள்ளார் இயக்குநர். முழுப்படமும் கேமராவை மறைத்து வைத்து எடுத்த்து போல நத கிராமத்திற்கே நம்மை கைப்பிடித்து அழைத்து சென்று விடுகிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ரிமா தாஸ். முழுப்படத்தையும் தனியாகவே ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் ரிமா தாஸ். ஒளிப்பதிவு குறித்தோ இயக்கம் குறித்து முறையாக என்ந்தவொரு படிப்பையும் படிக்கவில்லை என்பது பட்த்தை பார்க்கும்பொழுது வியப்பை ஏற்படுத்தும். முக்கியமாக மழைக்காட்சிகளிலும் வெள்ளக்காட்சிகளிலும் ஒளிப்பதிவு செம்ம.

சிறுவர்களின் சேட்டைகள், கும்பலாக இணைந்து பேண்ட் போல நின்று பாடுவது, மழைகளிலும் சகதிகளும் கிடந்து உருளுவது என சிறுவர்கள் தொடர்பான காட்சிகள் அனைத்தும் மிக இயல்பாக படம் பிடித்துள்ளார் ரிமா தாஸ். படத்தில் நடித்த அனைவரும் தொழில்முறை நடிகர்கள் கிடையாது என்பது இன்னொரு ஆச்சரியம். அனைவரும் நடிக்கிறார்கள் என்பது தெரியவே இல்லை. கேமராவின் முன்னே இயல்பான தங்களது வாழ்க்கையை வாழ்கிறார்கள் போலும் என்றுதான் எண்ண தோன்றும். அந்த அளவிற்கு மிக இயல்பாக இருக்கிறது. ராக்ஸ்டார்ஸ் என தலைப்பில் மியூசிக்கல் தலைப்படை வைத்துவிட்டு படம் முழுக்க பிண்ணனி இசை துளியும் இல்லை. துனு பாடும் காட்சிகளில் கூட இசை இல்லை. பிண்ணனி இசை இல்லாததும் படத்திற்கான பலம் என்று கூட சொல்லலாம்.

சிறுமியின் மியூசிக்கல் பேண்ட் கதையினூடாக அஸ்ஸாமின் கிராமத்தின் அழகையும் அவர்களது வாழ்க்கையையும் கலாச்சரத்தையும் கல்வியையும் பண்பாட்டையும் பதிவு செய்துள்ளார் இயக்குநர். இதன் வழியே ஆரம்பத்தில் நான் சொன்ன கேள்விகள் இயல்பாய் தோன்றுவது வில்லேஜ் ராக்ஸ்டாரின் சிறப்பு.

டொரோண்டோ மற்றும் கான்ஸ் போன்ற உயரிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது இந்த திரைப்படம். இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் கேரளா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்படுகிறது. தவறவிடாமல் தைரியமாக பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x