Published : 30 Mar 2023 06:07 AM
Last Updated : 30 Mar 2023 06:07 AM

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

விருதுநகர்: அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 31) கடைசி நாள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்காக திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மார்ச் 31-ம் தேதி வரை இணையவழியாக விண்ணப்பிக்க விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் https://careerindianairforce.cdac.in மற்றும் https://agnipathvayu.cdac.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப் படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு, 15 ஆண்டு காலத்துக்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவர். டிசம்பர் 26, 2002 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் ஜுன் 26, 2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு 17.5 ஆண்டுகள் முதல் 21 வயது வரை இருக்கலாம். உடல் தகுதி-ஆண்கள் 152.5 செ.மீட்டர் உயரம், பெண்கள் 152 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனையும், மே 20-ம் தேதி இணையவழி தேர்வும் நடைபெறும்.

கல்வித் தகுதி- குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் 10, பிளஸ் 2 இடைநிலை மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் அல்லது பட்டயப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் /இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி / இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட பட்டயம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அல்லது 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்தும், தொழில் சார்ந்த பாடம் அல்லாத இயற்பியல் மற்றும் கணிதத்துடன் 2 ஆண்டு தொழில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x