Published : 21 Mar 2023 05:14 AM
Last Updated : 21 Mar 2023 05:14 AM
மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்களுக்கு வரும் 25-ம் தேதி ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது என மண்டல மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்கள் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதற்கான ஆட்கள் தேர்வு வரும் 25-ம் தேதி சேலம் தமிழ்சங்கம் அண்ணா நூலக வளாகம் முதல் மாடியில் நடக்கிறது.
மருத்துவ உதவியாளர் பணிக்கு கல்வி தகுதியாக பி.எஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம் எல்டி அல்லது உயிர் அறிவியல் பட்டப்படிப்புகளான பி.எஸ்சி விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோடெக்னாலஜி, பிளாண்ட் பயாலஜி ஆகியவை படித்திருக்க வேண்டும்.
ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம் மாத ஊதியமாக ரூ 15,435 ரூபாய் வழங்கப்படும். தேர்வு முறையாக எழுத்துத்தேர்வு, மருத்துவ நேர்முகம்- உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, நேர்முகத்தேர்வு பின்பற்றப்படும்.
இதேபோல், ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு. இலகுரகவாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறையாக எழுத்துத்தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு நடத்தப்படும். மாத ஊதியம் ரூ 15,235 வழங்கப்படும். மேலும் விவரங்கள் அறிய 91542-51540, 73977-24832 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT