Published : 10 Mar 2023 07:48 AM
Last Updated : 10 Mar 2023 07:48 AM
காஞ்சிபுரம்: ராணுவத்துக்கு ஆள் சேர்க்க இந்த ஆண்டு முதல்ஆன்-லைன் முறையில் பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும், இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்று ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு பணிகள் இயக்குநர் எம்.கே.பாத்ரே தெரிவித்தார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள்நல்லுறவு மைய கூட்டரங்கில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு பணி மூன்று கட்டங்களாக நடத்தப்படும். கடந்த ஆண்டு வரை ஆள்சேர்ப்பு பணி உடல் தகுதித் தேர்வு, அதனைத் தொடர்ந்து மருத்துவத் தேர்வு நடத்தப்படும். பொது நுழைவுத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் மட்டுமே வர வேண்டும் என்று இருந்தது. ஆனால் தற்போது முதல் கட்டமாக ஆன்லைனில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த ஆன்லைன் தேர்வில் தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு 2-ம் கட்டமாக ஆள்சேர்ப்பு பணிக்கு அழைக்கப்படுவர். 2-வது கட்டத்தில் அவர்கள் உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதற்கு தகுதி பெற்றவர்கள் மருத்துவ பரிசோதனையான 3-ம் கட்டத்துக்குச் செல்வர். ஆன்லைன் சி.இ.இ. மற்றும் உடல்நிலைத் தேர்வுகளில் வேட்பாளர் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் இருக்கும்.
ஆன்-லைன் தேர்வுக்கான பதிவுகள் பிப். 16-ம் தேதி முதல் மார்ச் 15-ம் வரை இருக்கும். www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். பதிவு முடிந்த ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 17-ம் தேதி ஆன்-லைன் தேர்வுகள் இருக்கும். தேர்வு தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மேலும் பல விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தற்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்றார். இந்த சந்திப்பின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரைய்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியக்கோட்டி உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT