Published : 28 Feb 2023 03:56 AM
Last Updated : 28 Feb 2023 03:56 AM
சென்னை: பல துறையை சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருக்கிறது என்று துறை சார்ந்த அதிகாரிகள் கூறினர்.
தேசத்தின் பாதுகாப்புத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை, 10, 11, 12-ம் வகுப்பு, கல்லூரியில் இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்கள், அறிய செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் நடத்தப்பட்டது. இந்நிகழ்வை சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்து வழங்கின.
இந்த இணையவழி தொடர் நிகழ்வின் நிறைவுப் பகுதிகளான 13 மற்றும் 14-ம் பகுதிகள் கடந்த சனி, ஞாயிறு (பிப். 25, 26) நடைபெற்றன.
புதுடில்லியிலுள்ள டிஆர்டிஓ செப்டம் சேர்மன் ஆர்.அப்பாவுராஜ், ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலுள்ள (DRDO) வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில்பேசியதாவது; டிஆர்டிஓ நிறுவனம் 7 முக்கியமான பிரிவுக ளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இன்ஜினீயரிங், மெடிக்கல், ஐடி, புட் டெக்னாலஜிஸ், ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் உள்ளிட்ட பல துறையை சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.
இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் வெ.ராஜகோபால், ‘எல்லை சாலைகள் அமைப்பிலுள்ள (BRO) வேலை வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பேசியதாவது; 1960-ம்ஆண்டு மே 7 அன்று எல்லை சாலைகள் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பானது 11 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு தேவையான சாலை வசதிகள், பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பல வகையான செயல்களையும் எல்லை சாலைகள் அமைப்பு தனது முக்கிய பணியாகச் செய்கிறது என்றார்.
இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளை ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடியபோது கூறியதாவது; எல்லை சாலைகள் அமைப்பானது ராணுவத்தின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பதோடு நில்லாமல், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடி மக்களுக்குமான இணைப்புப் பாலமாகவும் விளங்கி வருகிறது என்றார்.
இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்த இரு நாள் நிகழ்வுகளையும் தவற விட்டவர்கள் https://www.htamil.org/Session13, https://www.htamil.org/Session14 என்ற லிங்குகளில் பார்த்து பயன்பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT