Published : 28 Dec 2022 04:13 AM
Last Updated : 28 Dec 2022 04:13 AM

விஏஓ, இளநிலை உதவியாளர் உட்பட குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,569 பணியிடங்கள் சேர்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியாக உள்ளதாகவும், 2,569 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் கடந்த ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 18 லட்சத்து 50,471 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூனில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

இதனிடையே, அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அமல்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. எனினும், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர் தாமதம் நிலவி வருகிறது. இதனால் வேலைவாய்ப்பு மற்றும் அடுத்தகட்ட தேர்வுகளுக்கு திட்டமிட்டிருந்த தேர்வர்கள் கவலையில் உள்ளனர். தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைந்து அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வில் 2,569 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: குரூப் 4 தேர்வில் 7,301 காலிப் பணியிடங்கள் இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 2,569 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த தேர்வு மூலம் 9,870 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்குள் காலியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போதுதான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x