Published : 01 Dec 2022 08:17 PM
Last Updated : 01 Dec 2022 08:17 PM
சென்னை: தமிழகத்தில் தமிழ் மொழியை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வில் தமிழில் இடம்பெறும் வினாக்களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற பாடப்பிரிவுக்கான வினாக்களும் திருத்தப்படும் என்ற திட்டமும் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கல்விக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் அரசால் அமல்படுத்துகிறது. இதுபோன்ற சூழலில் தமிழ் வழியில் அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உயர் கல்வித் துறையில் பொறியியல் கல்லூரிகளிலும் கட்டாயம் அறிவியல் தமிழ், தமிழர்களின் மரபுகள் என்ற தலைப்பில் தமிழ் மொழிப் பாடம் 2 செமஸ்டர்களுக்கு படித்து தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய திட்டம் நடப்பு கல்வியாண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் தவிர, அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இரு செமஸ்டரிலும் தலா 15 மணி நேரம் இதற்கான வகுப்புகளாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பொறியியல் கல்லூரிகளில் மொழிப்பாடத்திற்கு பாடமெடுக்க, உரிய தகுதி வாய்ந்த தமிழ் விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்களா என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும், ஏற்கெனவே பணிபுரியும் பொறியியல் துறை உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்களில் தமிழில் ஆர்வமுள்ளவர்களை தற்காலிகமாக தமிழ் மொழிப் பாடமெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அண்ணா பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘‘நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் முதலமாண்டு முதல் செமஸ்டரில் அறிவியல் தமிழ், 2-வது செமஸ்டரில் தமிழர்கள் மரபு என்ற தலைப்பில் தமிழ்ப் பாடம் கற்றல் திட்டம் அமல்படுத்திய நிலையில், அதற்கென புதிதாக யாரும் ஆசிரியர்களை நியமிக்கவில்லை. ஏற்கெனவே தொப்பூதியம், மணி நேர வகுப்பு எடுக்கும் சூழலில் தற்போது, தமிழ்ப் பாடமும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாருமே விரும்பாத கல்லூரிகளில் வேறு வழியின்றி தமிழ் படித்தவர்களை தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிய விரும்பும் தமிழ் விரிவுரையாளர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்ற வாய்ப்பாக அமையும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT