Published : 17 Nov 2022 07:39 AM
Last Updated : 17 Nov 2022 07:39 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊதியத்துடன் பயிற்சி, பட்டப்படிப்புடன் வேலைவாய்ப்பு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை: மகளிர் அதிக அளவில் வேலைவாய்ப்பை பெறும் பொருட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் (டாடா எலக்ட்ரானிக்ஸ்) நிரந்தர பணியில் பணிபுரிய பிளஸ் 2 வரை படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்கள் ஓராண்டு பயிற்சி முடித்த உடன் நிரந்தர பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஓராண்டு பணிபுரிந்த பின் அவர்களுக்கு டாடா நிறுவனத்தின் மூலம் பி.எஸ்.சி பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்தில் இருந்தே அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் தொடக்க ஊதியமாக வழங்கப்படுவதுடன் உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை சலுகை அடிப்படையில் வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் நவ. 18-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சுய விவரக் குறிப்பு ஆகிய அனைத்து அசல் சான்றுகளுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த நேர்முகத் தேர்வில் காஞ்சிபுரம் மாவட்ட வேலை தேடும் பெண்கள் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT