Published : 11 Aug 2022 06:37 AM
Last Updated : 11 Aug 2022 06:37 AM

பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு அறிமுகம்: தாட்கோ - ஹெச்சிஎல் சார்பில் நடத்தப்படுகிறது

சென்னை: ஹெச்சிஎல் நிறுவனத்துடன் தாட்கோ இணைந்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தாட்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2020-21 மற்றும் 2021-22-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பைதாட்கோ மூலம் ஹெச்சிஎல் நிறுவனம் வழங்க உள்ளது.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்குமுதல் ஆண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும். முதல் 6 மாதங்களுக்குஇணைய வழியில் பயிற்சிகள்வழங்கப்படும். பயிற்சிக்கு தேவையான மடிக்கணினியை ஹெச்சிஎல் நிறுவனமே வழங்கும்.

அடுத்த 6 மாதத்தில் சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா, லக்னோமற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில்அமைந்துள்ள ஹெச்சிஎல் நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். முதல் ஆண்டில் ஆறாவதுமாதம் முதல் மாணவர்களுக்கு நிறுவனம் வாயிலாக ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

இரண்டாம் ஆண்டில் மாணவர்களுக்கு 3 விதமான கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் பட்டப் படிப்பு பயில வழிவகை செய்யப்படும். அதன்படி ராஜஸ்தானில் உள்ள இந்தியாவிலேயே மதிப்பு மிக்க பிட்ஸ்-பிலானி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி டிசைன் அண்டு கம்ப்யூட்டிங், பாடப்பிரிவில் சேர்க்கப்படுவர்.

இது பிடெக் படிப்புக்கு சமமானதாகும். இந்த 4 ஆண்டு பட்டப் படிப்பை ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இக்கல்லூரியில் சேர 12-ம் வகுப்பில் இயற்பியல் பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல், தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தகுதிக்கேற்ப ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் பிசிஏ 3 ஆண்டு பட்டப் படிப்பு படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும். உத்தரபிரதேச மாநிலம்அமெதி பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் பிசிஏ, பிபிஏ மற்றும்பிகாம் பட்டப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்.

இந்த வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி பெறுவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். கடந்த 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டு 12-ம் வகுப்பில் கணிதம், வணிக கணிதம் பாடத்தில் மொத்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இதில் தாட்கோவின் பங்களிப்பாக ஹெச்சிஎல் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் பங்கேற்க திறன் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோவே ஏற்கும். பின்னர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக ஹெச்சிஎல் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.1.18 லட்சம் கட்டணத்தை முதல் 6 மாத பயிற்சிக்காலத்தில் தாட்கோ கடனாக வழங்கும்.

பிட்ஸ்-பிலானி பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் மற்றும் சாஸ்த்ரா மற்றும் அமெதி பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்ததும் ஹெச்சிஎல் நிறுவனத்தில் முதல் ஆண்டு திறமைக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வுடன் ஆண்டு ஊதியம் ரூ.1.7 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த நிபந்தனைகளின்படி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நுழைவுத் திறனுக்கான 3 பாடப்பிரிவு அதாவது தொடர்பு திறன் (அடிப்படை ஆங்கிலம்), ஆராயும் திறன், தர்க்கவியல் திறன் மற்றும் கணிதம் போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு பின் இணைய வழியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வில் 3 பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 10-க்கு 4 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானதாகும். மேலும் இத்திட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோவின் www.tahdco.com என்ற இணையதளத்தை காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x