Published : 19 Jul 2022 06:30 PM
Last Updated : 19 Jul 2022 06:30 PM
பிளஸ் டூவில் அறிவியல் பாடப் பிரிவை எடுத்துப் படிக்கும் பல மாணவர்களின் விருப்ப மேற்படிப்பாக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற படிப்புகளே முதன்மையாக இருக்கும்.
ஆனால், ‘பாரா மெடிக்கல்’ எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளும் ஏராளம் உண்டு. அவற்றில் சில முக்கியமான துணை மருத்துவப் படிப்புகளைப் பார்ப்போம்.
மருத்துவக் கதிரியக்கவியல் தொழில்நுட்பம்: மருத்துவத் துறையில் கதிரியக்கவியல் துறை மிக முக்கியமானதாகும். கதிரியக்கவியல் தொழில் நுட்பப் படிப்பில் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தும் முறையும் பரிசோதனை செய்யும் முறைகளும் விரிவாகக் கற்றுத் தரப்படும். 3 - 4 ஆண்டு பட்டப் படிப்பாக வழங்கப்படும் இந்தப் படிப்பைப் படித்துத் தேர்ச்சி பெறுபவர்கள், மருத்துவமனைகளில் ‘ரேடியாலஜிஸ்ட்’ பணிக்குச் செல்லலாம்.
மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம்: மருத்துவக் கதிரியக்கவியல் தொழில்நுட்பப் படிப்பைப் போலவே இதுவும் மருத்துவத் துணைப் படிப்புகளில் முக்கியமான ஒரு படிப்பு. நோயாளியின் ரத்தம், சிறுநீர், மலம், சளி, சதை, போன்றவற்றைப் பகுத்து ஆராய்ந்து அளிக்கும் முடிவுகளை வைத்துத்தான் மருத்துவர்கள் சிகிச்சை முறைகளைத் தொடங்குவார்கள்.
இளங்கலையில் இந்தப் படிப்பைப் படிப்பதன் மூலம் நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவ ஆய்வகப் படிப்பை முடிப்பதன் மூலம் ஹெமட்டாலஜி, நோயியல், இம்யூனலாஜி, ரத்த வங்கித் தொழில்நுட்பம், மூலக்கூறு நோயியல், உயிரித் தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், சீராலஜி உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றலாம்.
பிசியோதெரபி: துணை மருத்துவப் படிப்புகளில் அதிகம் படிக்கப்படும் படிப்பு இது. உடல் இயக்கவியல் சார்ந்த இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிப்பு. எலும்பு முறிவு, சதைப் பிடிப்பு, மூட்டு வலி என எலும்பு சார்ந்த பிரச்சினைகளுக்குத் தேவைப்படும் ஓர் அம்சம் பிசியோதெரபி.
4 ஆண்டுகள் உள்ள இந்தப் படிப்பைப் படித்து முடித்த பிறகு பிசியேதெரபிஸ்ட்டாக மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். மேலும், தனியாகவும் பிசியோதெரபி மையம் திறந்து பணியாற்றலாம்.
ஆப்தோமெட்ரி: துணை மருத்துவப் படிப்புகளில் ‘ஆப்தோமெட்ரி’ முக்கியமான படிப்பாக விளங்கிவருகிறது. இது முழுக்க முழுக்க கண் தொடர்பான படிப்பு. இந்தப் படிப்பை முடித்தவர்கள் கண் மருத்துவமனைகளில் பணிக்குச் சேர முடியும். ஆனால், கண் மருத்துவமனைகளில் பணியாற்ற இன்டர்ன்ஷிப் பயிற்சி முக்கியமான அளவுகோலாகப் பார்க்கப்படும்.
அறுவை சிகிச்சை அரங்குத் தொழில்நுட்பம்: மருத்துவத் துறையில் இதுவும் ஒரு முக்கியமான ஒரு படிப்பு. அறுவை சிகிச்சை அரங்கில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமன்றி ‘ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜிஸ்ட்’டும் முக்கியப் பங்கு வகிப்பார். இந்தப் படிப்பை முடித்தவர்கள் மருத்துவமனைகளில் ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியனாகச் சேரலாம்.
மருத்துவ ஆவண அறிவியல்: பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் தொடங்கி சிறிய நர்சிங்ஹோம் வரை ஒரு நோயாளியின் விவரங்கள், மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் என அனைத்தையும் ஆவணமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இது தொடர்பான பணிகளைச் செய்வதற்காகவே ‘மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ்’ என்கிற படிப்பு உள்ளது. வேலைவாய்ப்பு அதிகம் உள்ள இந்தப் படிப்பைப் படிப்பதன் மூலம் நல்ல வேலைவாய்ப்பைப் பெறலாம்.
இவை தவிர்த்து கார்டியோ வாஸ்குலர் தொழில்நுட்பம், மயக்கவியல் தொழில்நுட்பம், ரெஸ்பிரேடரி தெரபி, டயாலிசிஸ் தொழில் நுட்பம், நரம்பியல் தொழில்நுட்பம் என இன்னும் நிறைய துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT