Published : 16 Jun 2022 04:49 AM
Last Updated : 16 Jun 2022 04:49 AM
சென்னை: அக்னி பாதை திட்டத்தின் கீழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த மாணவர்கள் முப்படைகளில் பணியில் சேர விரைவில் தேர்வு நடைபெறும் என தக்ஷிண பாரத ராணுவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தக்ஷிண பாரத ராணுவ தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பள்ளி மாணவர்களை ராணுவம், விமானம் மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளில் பணியில் சேர்ப்பதற்காக மத்திய அரசு அக்னி பாதை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10 மற்றும் 12-ம் வகுப்பை முடித்த மாணவர்கள் பணியில் சேரலாம். 17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்புதிய திட்டத்தில் பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர். 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் இவர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.30 ஆயிரமும், 2-ம் ஆண்டு ரூ.33 ஆயிரமும், 3-ம் ஆண்டு ரூ.36,500-ம், 4-ம் ஆண்டு ரூ.40 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். இதில், 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப்படும். 4 ஆண்டு பணி முடித்துவிட்டு வெளியே செல்லும் போது ரூ.11.71 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அத்துடன் ரூ.48 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடும் வழங்கப்படும்.
மேலும், பணியின்போது வீரமரணம் அடையும் வீரர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அத்துடன், 100, 75, 50 சதவீதம் காயம் அடையும் வீரர்களுக்கு முறையே ரூ.44 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். பணிக் காலத்தின் போது, ஆண்டுக்கு ஒரு மாதம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். ஆண், பெண் என இருபாலரும் தேர்வு செய்யப்படுவர்.
இந்த ஆள்சேர்ப்புக்கான விளம்பரம் விரைவில் வெளியிடப்படும். பணியில் சேரும் வீரர்களுக்கு 24 வாரம் பயிற்சி அளிக்கப்படும். 4 ஆண்டுகள் பணி முடித்த வீரர்களில் 25 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும்.
மேலும், 4 ஆண்டுகள் பணி முடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் சேவை நிதியின் மூலம் அவர்கள் வங்கியிலிருந்து கடன் பெற்று அதன் மூலம், சுயமாக தொழில் தொடங்கலாம். எனவே, நாட்டுக்காக சேவை புரிய விரும்பும் மாணவர்கள் இப்பணியில் சேரலாம். இவ்வாறு அருண் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT