Published : 14 Jun 2022 09:36 PM
Last Updated : 14 Jun 2022 09:36 PM

முப்படைகளில் இளைஞர்களுக்கு 4 ஆண்டு பணி - 'அக்னிபாத்' திட்டத்திற்கு ஒப்புதல்: ஊதியம் விவரம் வெளியீடு

புதுடெல்லி: ஆயுதப் படைகளில் 4 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘அக்னிபாத்’ என்ற புதிய ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆயுதப் படைகளில் இந்திய இளைஞர்களை பணியமர்த்தும் கவர்ச்சிகரமான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. 'அக்னிபத்' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் 'அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். தேசபக்தியுடன், துடிப்புமிக்க இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டு காலத்திற்கு பணியாற்ற அக்னிபத் திட்டம் அனுமதிக்கும்.

ஆயுதப் படைகளில் இளைஞர்களை பணியமர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் சமுதாயத்திலிருந்து சமகால தொழில்நுட்ப போக்குகளுக்கு ஏற்ற வகையில் திறமை மிக்க இளைஞர்களை சீருடைப் பணிக்கு ஈர்க்க இது வாய்ப்புகளை வழங்கும். இளைஞர்களை படைகளில் சேர்ப்பதன் மூலம் வீரர்களின் சராசரி வயதை நான்கைந்து ஆண்டுகள் குறைக்க இது வகை செய்யும்.

அரசு அறிமுகப்படுத்தியுள்ள மிகப் பெரிய பாதுகாப்புக் கொள்கை சீர்திருத்தமான இது, முப்படைகளிலும் மனிதவளக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். உடனடியாக அமலுக்கு வரும் இந்தக் கொள்கை முப்படைகளிலும் ஆள்சேர்ப்பை நிர்வகிக்கும்.

இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, அபாயம் மற்றும் சிரமப்படிகளுடன் ஈர்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் முப்படைகளிலும் வழங்கப்படும். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரர்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவர்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும்.

ஊதியம் எவ்வளவு? - அக்னி வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிர்ணயிக்கப்படும். அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும். 2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும்.

4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம், வீரர்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும்.

அக்னிபத் திட்டத்தின்கீழ், 4 ஆண்டு காலத்திற்கு வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள் இந்த ஆண்டு 46,000 பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள். இதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தெரிவித்த அமித் ஷா:

இதற்கிடையில், அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், “இந்தத் திட்டம் இளைஞர்களிடம் உள்ள திறன்களை மேம்படுத்தி நாட்டில் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தும். இந்த முடிவுக்காக பிரதமர் நரேந்திர மோடியை நான் பாராட்டுகிறேன்

அக்னிபத் திட்டம் புரட்சிகரமான முன்முயற்சி. வெளிப்படையான நடைமுறை மூலம் பதினேழரை வயதிலிருந்து 21 வயது வரையுள்ள இளைஞர்கள் ஆயுதப் படைகளில் சேர்ந்து நாட்டுக்கு சேவையின் நிறைவில் வரியில்லாமல் ரூ.11.71 லட்சம் பெறுதன் மூலம் இவர்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.

நாட்டிற்கும் தங்களுக்கும் பொன்னான எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த வாய்ப்பாகும். நரேந்திர மோடியின் தொலைநோக்குள்ள முடிவு இந்தியாவின் இளைஞர்களுக்கு ஒழுக்கம், திறமை, உடல்தகுதி, ஆகியவற்றோடு அவர்களை பொருளாதார ரீதியில் தற்சார்பு உடையவர்களாக மாற்றுவது தற்சார்பு இந்தியா என்பதற்கான அடித்தளத்தை உருவாக்கும்" என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x