Published : 03 Jun 2022 01:17 PM
Last Updated : 03 Jun 2022 01:17 PM
இணையவழிக் கூட்டங்கள், குழு விவாதங்கள் போன்றவை சகஜமாகிவிட்ட இக்காலத்தில் டிஜிட்டல் தளங்களில் நம்மை வெற்றிகரமாக வெளிப்படுத்திக்கொள்வது எப்படி என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லா மனிதர்களுக்குள்ளும் இயற்கையாகவே திறன்கள் புதைந்து கிடக்கின்றன. அதை அடையாளம் கண்டு பட்டை தீட்டி வெளிக்கொண்டு வரும்போது உலகம் நம்மை அடையாளம் கண்டு அங்கீகரிக்கிறது. அத்தகையவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில் உயர் கல்வி என்பது வேலைக்குச் செல்வது, அதிக சம்பளம் பெறுவது என்கிற கண்ணோட்டத்தில்தான் பொதுவாகப் பார்க்கப்படுகிறது. எந்தத் துறையில் படித்தவர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்களோ அந்தப் படிப்பில் சேரவே மாணவர்களும் பெற்றோரும் போட்டிபோடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்தத் துறையில் வேலைவாய்ப்பு குறையும்போது படித்த படிப்புக்கு வேலை இல்லை என்று புலம்புகிறார்கள்.
உயர் கல்வி முடித்தவுடன் வேலை வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்பதே இன்றைய மாணவர்கள், பெற்றோர்களின் விருப்பம். ஆனால், பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள்கூடப் பொறியியல் படிப்பில் கணிதம் போன்ற பாடங்களில் தேர்ச்சிபெற சிரமப்படுவதைப் பார்க்க முடிகிறது. அது மட்டுமல்ல நம்முடைய பள்ளிக் கல்வி முறையில் மதிப்பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதால், பெரும்பான்மையான மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது திறன்கள் பற்றிய அறிவைப் பெறாதவர்களாக உள்ளார்கள்.
மதிப்பெண்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைத் திறன்களுக்கு கொடுக்காததால்தான் இன்று இளைஞர்களின் அறிவும் திறமையும் பயன்படாமல் போகின்றன. வேகமாக வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நிறுவனங்களும் தங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திறனுடைய பட்டதாரிகளை மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள். வேலைக்கான பயிற்சி என்கிற பெயரில் அதற்கான நேரத்தையும் பணத்தையும் இழக்க நிறுவனங்கள் விரும்புவதில்லை.
தங்களை மேம்படுத்தித் திறன்களை வளர்த்துக் கொள்ளும் பணியாளர்களை எந்த நிறுவனமும் வேலையிலிருந்து அனுப்புவதில்லை என்பதே உண்மை. திறன்கள் பலவாறாக நம்மிடையே இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படுகின்றன. படிக்கும்போதே திறன்களை அடையாளம் கண்டு, அதற்குத் தக்க பயிற்சி அளித்து திறன்களை மேம்படுத்துபவரே உயர்கல்வியில் வெற்றியின் உச்சத்துக்குச் செல்கிறார்கள்.
ஏராளமான மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் சரியாக உரையாடும் திறன் இல்லாததால் வளாக நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. எனவே, மாணவர்கள் தெளிவாகப் புரியும் விதத்தில் உரையாடும் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம். படிக்கும்போதே பொதுவான ஆங்கில மொழித்திறன், ஆளுமைப் பண்பு, அடிப்படைத் தொழில்நுட்ப அறிவு, படைப்பாற்றல், புத்தாக்கத் திறன், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன், குழு கலந்துரையாடல், விமர்சனங்களை எதிர்கொள்ளுதல், தகவமைப்புச் சிந்தனை, இணைந்து செயல்படும் திறன், முன்னோக்குப் பாதையில் சிந்திப்பது உள்படப் பல திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உயர் கல்வி முடித்து நீங்கள் ஒரு சாதாரண பட்டதாரியாக இல்லாமல், திறன்களுடைய பட்டதாரியாக உருவானால் மிகச் சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம். எந்த உயர்கல்வி படிப்பைப் படித்தாலும் அந்தத் துறையில் திறன்களை வளர்த்துக்கொண்டு அவற்றை வெளிப்படுத்துங்கள். பட்டதாரிகளிடம் திறன்களை மட்டுமே நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகம் எப்போதும் மிகச் சிறந்த அங்கீகாரம் அளிக்கிறது.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT