Published : 02 Jun 2022 06:32 AM
Last Updated : 02 Jun 2022 06:32 AM
கோவை: கோவையில் நாளை முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாமில் 2021, 2022-ல் பிளஸ் 2 முடித்தவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை சிங்காநல்லூர், எச்ஐஎச்எஸ் காலனி சாலையில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் வரும் 3, 4, 5-ம் தேதிகளில் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தினமும் காலை 8.30 மணி முதல் நடைபெறும் முகாமில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள், 2021-ல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். கலந்துகொள்வோர் பொது கணிதம் அல்லது வணிகக் கணிதம் பயின்றவர்களாக இருக்க வேண்டும்.
முகாமுக்கு வரும்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்று, நடப்பாண்டு பிளஸ் 2 பயின்றவர்கள் பிளஸ் 2 ஹால் டிக்கெட், மாணவர், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.
ஹெச்.சி.எல். டெக்பீ என்பது தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு தொழிலை தொடர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஒரு திட்டமாகும். இதில், சேர்ந்த மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையின் அடிப்படை திறன் பயிற்சியை முடித்த பிறகு, ஹெச்.சி.எல். நிறுவனத்தில் முழுநேர வேலையில் ஈடுபடுத்தப்படுவார்கள். வகுப்பறை பயிற்சிக்கு பிறகு, 6 முதல் 12 மாத காலம் ‘இன்டென்ஷிப்’ பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன் பணிக்கேற்ப ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.
சாப்ட்வேர் டெவலப்பர், டிசைன் இன்ஜினியர், டெக்னிக்கல் அனலிஸ்ட், டேட்டா இன்ஜினியர் போன்ற பணிகள் வழங்கப்படும். பணிக்கு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிட்ஸ் பிலானி, அமிட்டி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். இதற்கான கல்விக் கட்டணத்தில் ஒரு பகுதியை ஹெச்.சி.எல். அளிக்கும். வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கராஜ் (9865535909), சபரிநாதன் (8903245731) ஆகியோரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT