Published : 17 May 2022 05:19 PM
Last Updated : 17 May 2022 05:19 PM

குரூப் 2 தேர்வு: தமிழகத்தில் 5,000 பதவியிடங்களுக்கு 11.78 லட்சம் பேர் போட்டி

சென்னை: தமிழகத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதவுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,000 பதவியிடங்களுக்கான தேர்வு வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் பாலசந்திரன் அளித்த பேட்டியில், "குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி 21-ம் தேதி நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு நடைபெறும் மையத்திற்கு வர வேண்டும். 9 மணிக்கு பிறகு தேர்வு அறைக்கு செல்ல அனுமதி இல்லை. 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி 12.30 மணிக்கு தேர்வு நிறைவு பெறும். ஆனால் 12.45 மணி வரை தேர்வர்கள் தேர்வு அறையில்தான் இருக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் 11.78 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். தற்போது வரை 9 லட்சம் பேர் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். அனைவரும் வரும் நாட்களில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்கிறோம்.

இதில் ஆண்கள் 4.96 லட்சம் பேர். பெண்கள் 6.81 லட்சம் பேர். திருநங்கைகள் 48 பேர். மாற்றுத்திறனாளிகள் 14,000 பேர். 79,000 பேர் தமிழ் வழியில் படித்தோம் என்று விண்ணப்பித்துள்ளனர். பொது ஆங்கிலம் பிரிவில் 2.31 லட்சம் பேரும், பொதுத் தமிழ் பிரிவில் 9.46 லட்சம் பேரும் தேர்வு எழுதவுள்ளனர்.

38 மாவட்டங்களில் 117 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4012 தலைமை கண்காணிப்பாளர்கள், 58,900 தேர்வு கூட கண்காணிப்பாளர்கள், 993 நடமாடும் குழுக்கள், 323 பறக்கும் படைகள், 6400 கண்காணிப்பு குழுக்கள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் 7 மையங்களில் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். அடுத்த படியாக மதுரையில் 64 ஆயிரம் பேர், சேலத்தில் 63 ஆயிரம், திருச்சியில் 50 ஆயிரம், கோவையில் 48 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். ஜூன் மாதம் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x