Published : 05 Mar 2022 04:38 PM
Last Updated : 05 Mar 2022 04:38 PM
புதுச்சேரி: ’சமுதாயத்தில் முன்னேற வேண்டும். ஏதாவது ஒன்றில் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மனதில் இருக்க வேண்டும்’ என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து நடத்தும் இரண்டு நாள் வேலைவாய்ப்பு முகாம் 2022, புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இன்று (மார்ச்.5) தொடங்கியது. நிபுனா மற்றும் சேவா இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமினை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பேசியது: “வேலை வாய்ப்பு முகாம் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வருபவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட வேண்டும் என நமச்சிவாயம் சொல்லியிருக்கிறார். அதனை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். நமக்கு ஆதரவு இருந்தால் வருடம் ஒருமுறை மட்டுமல்ல, 6 மாதத்துக்கு ஒரு முறை கூட நடத்துவதற்கான முயற்சியை செய்ய முடியும். அதேபோல், தொழிற்சாலைகளும் தொடங்கப்பட வேண்டும்.
நான் ஆளுநர் என்ற முறையில் தொழில் முனைவோர் அத்தனை பேரையும் புதுச்சேரிக்கு வரவேற்கிறேன். வருங்காலத்தில் தொழில் முறையில் முன்னேறிய மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் கனவாக இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் மாத ஊதியம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தபோது நான் பார்த்துள்ளேன். விவேகானந்தர் 100 இளைஞர்களை கொடுங்கள் நாட்டை மாற்றிக் காண்பிப்பேன் என்று சொன்னார். அந்த துடிப்பை நான் உங்களிடம் (இளைஞர்கள்) பார்க்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். ஏனென்றால் அந்த காலத்தில் அப்பா, மகனுக்கு வீடு, பைக் வாங்கி கொடுத்த நிலை மாறி, இன்று மகன், அப்பாவுக்கு வீடு, பைக் வாங்கி கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து இன்றைய இளைஞர்கள் எந்தளவுக்கு முன்னேறியுள்ளனர், குடும்ப பாங்கோடு இருக்கின்றனர் என்பதை பார்க்க முடிகிறது.
இப்போது இளைஞர்களை நோக்கி இந்த உலகம் சென்று கொண்டிருக்கிறது. இன்று நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் வேலை பெருபவர்களுக்கு வாழ்த்துகள். வேலை வாய்ப்பு கிடைக்காதவர்கள் மன வருத்தம் அடைய வேண்டாம். வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் தம்மை தாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
நான் ஆளுநராக அல்ல, மருத்துவராக சொல்கிறேன். சமுதாயத்தில் முன்னேற வேண்டும். ஏதாவது ஒன்றில் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் இருந்து கொண்டிருக்க வேண்டும். அதிமாக புத்தகங்களையும், சுயசரிதைகளையும் படியுங்கள். அதன்மூலம் வாழ்க்கையில் நாம் எப்படி முன்னேற வேண்டும் என்பதையும் நாம்மால் கற்றுக்கொள்ள முடியும்.
இன்றைய கரோனா காலக்கட்டத்தில் பல பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். இதன் காரணமாக தெலங்கானா ராஜ்பவனில் பலருக்கு கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொடுத்தோம். அதில் பாதி பேர் இஸ்லாமிய பெண்கள். தற்போது கைத்தொழில் கற்றுக்கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். ஏனென்றால் பொருளாதார சுதந்திரம் இருந்தால் தான் துணிச்சலாக இருக்க முடியும்.
பொருளாதார சுதந்திரம் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களின் கையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். ஆகவே, புதுச்சேரியில் உள்ள அத்தனைபேரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்’ என்று ஆளுநர் தமிழிசை பேசினார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், விவிலியன் ரிச்சர்ட்ஸ், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகன், பதிவாளர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து 10,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்க இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT