Published : 23 Feb 2022 04:36 PM
Last Updated : 23 Feb 2022 04:36 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 100 நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 5, 6-ல் நடைபெற்றவுள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தனியார் பங்களிப்போடு வரும் மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்கான தகவல் கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (பிப். 23) நடைபெற்றது.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வேலைவாய்ப்பு முகாமிற்கான தகவல் கையேட்டினை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ''புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதால் வரும் மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த முகாமில் பங்கேற்கும் 100 நிறுவனங்கள் மிகவும் பிரபலமானவையாகும்.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்தான் முகாம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இந்த முகாம் அமையும். இதுபோன்று பல முகாம்கள் இனிவரும் காலங்களில் நடத்தப்படும். கரோனா காலத்தில் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்'' என்றார்.
முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ''புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு நிறைய வேலை கிடைக்க வேண்டும் என்று ஆளுநருக்கு பெரிய ஆர்வம் உள்ளது. அரசும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க பல வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் இதுவும் ஒரு வகை. புதுச்சேரியில் நல்ல கல்வியைக் கொடுப்பதற்கு நிறைய கல்வி நிறுவனங்களை கொண்டு வந்துள்ளோம். ஆனால், வேலைவாய்ப்பு என்று பார்க்கும்போது குறைவான நிலையில் இருந்தாலும், வெளியில் பல பெரிய நிறுவனங்களுக்கு செல்லும்போது படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கின்ற வாய்ப்பு ஏற்படும். அப்படி நல்ல வேலை வாய்ப்பு முகாம் வரும்போது கலந்து கொள்ளும் இளைஞர்களை எளிதாக, அந்த நிறுவனங்களே தேர்வு செய்து பணியில் அமர்த்தும். இதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடிகிறது என்ற நிலையில் ஆளுநர் முழு முயற்சி எடுத்துள்ளார். நிறுவனங்களும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த முன்வந்துள்ளனர்.
அரசுக்கு எந்த செலவும் இல்லாமல் ஒரு வேலைவாய்ப்பு முகாமை தனியார் நிறுவனம் செய்து கொடுத்துள்ளது பாராட்டுக்குரிய ஒன்று. பொதுவாக தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி அக்கல்லூரியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பார்கள். ஆனால், புதுச்சேரியில் ஒட்டுமொத்த படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் முயற்சியை மேற்கொண்ட ஆளுநருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படித்துவிட்டு வேலையில்லை என்றால் மிகவும் சிரமமாக இருக்கும். அதனால் எங்கெல்லாம் வழிகள், வாய்ப்புகள் உள்ளதோ, அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது இளைஞர்களின் கடமையாகும்'' என்றார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக பதிவாளர் சிவராஜ் மற்றும் சேவா இன்டர்நேஷனல் நிபுனா நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கான நன்கொடையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மற்றும துணைநிலை ஆளுநர் முன்னிலையில் நிபுனா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT