Published : 10 Jan 2022 01:25 PM
Last Updated : 10 Jan 2022 01:25 PM

அரசு, உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலியிடம் கணக்கெடுப்பு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலி இடங்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் (கணினி பயிற்றுநர்) சார்ந்த முழு விவரங்களையும் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டரங்கில் நேர்முக உதவியாளர் அல்லது கண்காணிப்பாளர் மூலம் வரும் 11-ம் தேதி (நாளை) ஒப்படைக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 44 கணினி ஆசிரியர்கள் (கிரேடு-1) உட்பட 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் (கிரேடு-1) விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான கணினிவழி தேர்வு ஜன.29-ம் தேதி முதல் பிப்.6-ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

ஆனால், தற்போது நிலவும் கரோனா பெருந்தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் சூழலில், அறிவிக்கப்பட்டபடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x