Published : 05 Oct 2021 02:42 PM
Last Updated : 05 Oct 2021 02:42 PM

பாரத ஸ்டேட் வங்கியில் 2,056 காலிப் பணியிடங்கள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பயிற்சி அதிகாரி (Probationary Officer) பதவியில் 2,056 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு இன்று (அக்.5) முதல் விண்ணப்பிக்கலாம்.

இப்பதவிக்கு ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

தகுதி

01.04.2021-ன் படி வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் சாதி அடிப்படையில் அதிகபட்சமாக 15 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரு தேர்வுகள் இருக்கும். இரு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும்.

தேர்வு விவரம்

முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளில் இருந்து மொத்தம் 100 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். ஒரு மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும்.

தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண் அளிக்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 2-வது கட்டத் தேர்வான மெயின் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இதில், அப்ஜெக்டிவ் வடிவிலான கேள்விகளும், கூடுதலாக விரிவாக விடையளிக்கும் வகையிலான வினாக்களும் கேட்கப்படும்.

ரீசனிங், கணினி அறிவு, டேட்டா அனலசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து 155 கேள்விகளும் (200 மதிப்பெண்), ஆங்கிலத்தில் விரிவாக பதிலளிக்கும் வினாக்களும் (50 மதிப்பெண்) இடம்பெறும்.

முதல்நிலைத் தேர்வுக்கும் மெயின் தேர்வுக்கும் தபாலில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அனுப்பப்படாது. அவற்றை விண்ணப்பதாரர்களே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

முதல்நிலைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை நவம்பர் 1 அல்லது 2-வது வாரத்தில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மெயின் தேர்வில் வெற்றி பெறுவோருக்குக் குழு விவாதம், நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இலவசப் பயிற்சி

எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும், சிறுபான்மையினருக்கும் (கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்) பாரத ஸ்டேட் வங்கி சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே தவறாமல் இதுகுறித்துக் குறிப்பிட வேண்டும்.

இலவசப் பயிற்சி நவம்பர் மாதம் 2-வது வாரம் நடைபெறும். இதற்கான அனுமதிச் சீட்டை நவம்பர் மாதம் 1-வது வாரத்தில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவினருக்கும் ஓபிசி பிரிவினருக்கும் ரூ.750. எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி ஆகிய பிரிவினருக்குக் கட்டணம் எதுவுமில்லை. உரிய தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் இன்று (அக். 5) முதல் அக்டோபர் 25-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதே காலகட்டத்திற்குள் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

தகுதியுடைய பட்டதாரிகள் பாரத ஸ்டேட் வங்கியின் www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். பிறகு விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரிகள் விண்ணப்பிக்க: https://ibpsonline.ibps.in/sbiposasep21/

கூடுதல் தகவல்களுக்கு: https://sbi.co.in/documents/77530/11154687/041021-Final+Advertisement+PO+21-22.pdf/61eb5452-c5e8-e057-e460-1e89486812d8?t=1633349820829

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x