Published : 18 Jul 2020 06:06 PM
Last Updated : 18 Jul 2020 06:06 PM
தனியார்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளைத் தெரிவிக்கும் இணையதளத்தில் ஒரே மாதத்தில் 418 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக கோவை மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் ஆ.லதா தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று (ஜூலை 18) அவர் கூறியதாவது:
"வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில், தமிழ்நாட்டில் வேலைதேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து, வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நோக்கில், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்து தங்களின் கல்வித் தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம். தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள், அதற்கான தகுதி, சம்பளம் ஆகியவற்றை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இதன்மூலம், தகுதியான நபர்களைத் தேர்வு செய்து, நிறுவனங்கள் பணி நியமனம் செய்வதற்கு இந்த இணையதளம் வழிவகை செய்கிறது.
வேலை அளிப்போர் மற்றும் வேலை தேடுவோருக்குக் கட்டணமின்றி இந்தச் சேவை வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த இணையதளத்தில் 418 தனியார் நிறுவவனங்கள் பதிவு செய்துள்ளன. சுமார் 5,600 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை மண்டலத்தில் மட்டும் 120 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பல நிறுவனங்கள் செல்போனில் தொடர்புகொண்டு நேர்காணல் செய்து, இணையவழி பணி நியமன உத்தரவுகளை வழங்கியுள்ளன. கரோனா காலத்தில் வேலைதேடும் பலருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருந்து வருகிறது".
இவ்வாறு லதா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT