Published : 17 Feb 2020 09:48 AM
Last Updated : 17 Feb 2020 09:48 AM
சென்னையில் வரும் 21-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முழு கூடுதல் பொறுப்பு இயக்குநர் வே.விஷ்ணு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வே.விஷ்ணு இன்று (பிப்.17) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது 'வேலைவாய்ப்பு வெள்ளி'யாக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித்தகுதியை உடைய மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்கள், பணியாளர்கள் / ஆட்கள் தேவைப்படும் நேர்வில் தங்கள் நிறுவனத்தின் முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்கள் நிறுவனத்திற்கான பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இச்சேவைக்குக் கட்டணம் ஏதுமில்லை.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் / தனியார் துறை நிறுவனங்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT