Published : 01 Apr 2025 07:26 AM
Last Updated : 01 Apr 2025 07:26 AM
சென்னை: டிஎன்பிஎஸ்சி வருடந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு இன்று (ஏப்.1) வெளியிடப்படுகிறது. முதல்முறையாக குருப்-1 பதவிகளுடன் தொழிலாளர் உதவி ஆணையர் பதவியும் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத் துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குருப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.
முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளை உள்ளடக்கிய இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 34 ஆகவும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-யின் 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டணையில், குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்பட்டு முதல்நிலைத் தேர்வு ஜுன் 15-ம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளளது.
அதன்படி, குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு இன்று (ஏப்.1) வெளியிடப்படுகிறது. இதற்கிடையே, குருப்-1 கேடரில் இதுவரை தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு குருப்-1 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.
அரசுக்கு வேண்டுகோள்: முன்பு தனித் தேர்வாக நடத்தப்பட்டுவந்த தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வெழுத இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது. ஆனால், தற்போது குருப்-1 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படுவதால் வயது வரம்பு கட்டுப்பாடு இந்த பதவிக்கும் பொருந்தும். முன்பு தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வை தொழிலாளர் மேலாண்மையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது தொழிலாளர் மேலாண்மையில் டிப்ளமா பெற்ற பட்டதாரிகள் மட்டுமே எழுத முடியும். ஆனால், புதிதாக வெளியிடப்பட்ட அரசாணையின்படி, குருப்-1-ல் அடங்கிய பதவிகளைப் போன்று ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மட்டும் இதற்கு போதுமானது.
தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வு கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. 2023 டின்பிஎஸ்சி தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற இத்தேர்வு திட்டமிட்டபடி அந்த ஆண்டு நடத்தப்படவில்லை. அதோடு அடுத்துவந்த 2024 தேர்வு அட்டவணையிலும் அத்தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறவில்லை. தொழிலாளர் மேலாண்மையில் பட்டம் பெற்றவர்களும், டிப்ளமா பெற்றவர்களும் கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வை எதிர்பார்த்துள்ளனர்.
எனவே, அவர்களின் நலனை கருத்தில்கொண்டு தொழிலாளர் மேலாண்மையில் பட்டம் அல்லது டிப்ளமா பெற்றவர்களுக்கு குருப்-1 தேர்வுக்கான வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தடவையாவது வயது வரம்பு தளர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேர்கவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment