Published : 31 Mar 2025 06:34 AM
Last Updated : 31 Mar 2025 06:34 AM
சென்னை: நாடு முழுவதும் 9,970 உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் 510 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் ஏப்.10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்கட்டமாக, நாடு முழுவதும் 9,970 உதவி ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக, கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் 1,461 உதவி ஓட்டுநர் பணி இடங்களும், தென் மத்திய ரயில்வேயில் 989 இடங்களும், மேற்கு ரயில்வேயில் 885 இடங்களும், தென் கிழக்கு ரயில்வேயில் 796 இடங்களும், கிழக்கு ரயில்வேயில் 768 இடங்களும், மேற்கு மத்திய ரயில்வேயில் 759 இடங்களும், கிழக்கு மத்திய ரயில்வேயில் 700 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. தெற்கு ரயில்வேயில் 510 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஏப்.10 முதல் விண்ணப்பிக்கலாம்: வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மே 9-ம் தேதி கடைசி நாள். அனைத்து ஆர்ஆர்பி இணையதளங்களிலும் இதற்கான முழு தகவலும் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment