Published : 15 Feb 2025 04:51 PM
Last Updated : 15 Feb 2025 04:51 PM

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணிக்கு ஏப்.5, 6-ல் போட்டித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பாடப்பிரிவுகளில் 232 உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 24.11.2023 அன்று வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் பெற்றது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதற்கான போட்டித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வு தொடங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்படும். அதை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் விண்ணப்பதாரர்களுக்கு தனியாக அனுபப்பப்படாது என்று அவர் கூறியுள்ளார்.

முதல்முறையாக டிஆர்பி மூலம் தேர்வு: அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்கள் இதுவரை அப்பல்கலைக்கழகம் மூலமாகவே நிரப்பப்பட்டு வந்தன. தற்போது முதல்முறையாக அப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x