Published : 02 Jan 2025 06:26 AM
Last Updated : 02 Jan 2025 06:26 AM
சென்னை: நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 651-லிருந்து 992 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
உதவி பொறியாளர் (சிவில்), வேளாண் அதிகாரி (விரிவாக்கம்), புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), மருந்து ஆய்வாளர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், அருங்காட்சியக காப்பாட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 651 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு (நேர்காணல் இல்லாதது) கடந்த அக்டோபர் மாதத்தில் வெவ்வேறு நாட்களில் நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 651-லிருந்து 992 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ். கோபால சுந்தரராஜ் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன் புதிதாக 341 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பதவிகளில் பலவற்றில் காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே போல், புதிதாகவும் நிறைய பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய பணியிடங்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் (சிவில்) பணியிடமும் (45 காலியிடங்கள்), தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உதவி பொறியாளர் (சிவில்) பணியிடமும் (35 இடங்கள்) தாட்கோ உதவி பொறியாளர் (சிவில்) பணியிடமும் (15 காலியிடங்கள்) பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை கணினி இயக்குநர் மற்றும் தடுப்பு மருந்து ஸ்டோர்-கீப்பர் பணியிடமும் (11 காலியிடம்) குறிப்பிடத்தக்கவை. முன்பு அந்தந்த வாரியங்கள் வாயிலாக இக்காலியிடங்கள் நிரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT