Published : 29 Dec 2024 01:56 PM
Last Updated : 29 Dec 2024 01:56 PM
சென்னை: நேர்காணல் இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணித் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
உதவி பொறியாளர், வேளாண் அதிகாரி, புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 652 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு (நேர்காணல் இல்லாதது) கடந்த அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட பாடத்தேர்வு கணினிவழி தேர்வாகவும், கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஓஎம்ஆர் ஷீட் வடிவிலான தேர்வாகவும் நடைபெற்றன.
இத்தேர்வை 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வில் இடம்பெற்ற வெவ்வேறு பாட வினாக்களுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) நவம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருப்பதாலும், பாதி தேர்வு இணையவழியில் நடத்தப்பட்டதாலும் முடிவுகள் வெகுவிரைவில் வெளியிடப்படும் என தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நேர்முகத்தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணித்தேர்வு முடிவுகள் வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குரூப் 4 , குரூப்-2 தேர்வுகளுடன் ஒப்பிடும்போது ஒரு லட்சத்துக்கும் குறைவானோர் எழுதியுள்ள தொழில்நுட்ப பணி தேர்வின் முடிவுகளை 4 மாதங்கள் கழித்து வெளியிடுவது தேர்வர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து தேர்வர்கள் கூறும்போது, ‘‘5 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதிய ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலைத் தேர்வை 57 நாட்களில் வெளியிட முடிகிறபோது 90 ஆயிரத்துக்கும் குறைவானோர் எழுதியுள்ள தொழில் நுட்பணிகளுக்கான தேர்வை அதுவும் பாதி கணினிவழியில் நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை ஒரே மாதத்தில் வெளியிட முடியும். தேர்வு முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. எனவே, குறைந்தபட்சம் ஜனவரி மாதத்திலாவது முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்தம் காலியிடங்கள் 652 மட்டுமே என்பதால் சான்றிதழ் சரிபார்ப்பையும் விரைந்து நடத்த வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரியிடம் கேட்டபோது, "பிற தேர்வுகளுடன் ஒப்பிடும்போது, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வை (நேர்காணல் இல்லாதது) எழுதியவர்களின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும், பாடப்பிரிவுகள் அதிகம். எனவே, வெவ்வேறு பாடங்களுக்கான விடைத்தாள்களையும் அனைத்து பதவிகளுக்கும் பொதுவாக நடத்தப்பட்ட கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு தாள் விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment