Published : 25 Nov 2024 07:17 PM
Last Updated : 25 Nov 2024 07:17 PM

வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் தற்காலிக தட்டச்சர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தற்காலிகப் பணியில் உள்ள தட்டச்சர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் திங்கட்கிழமை (நவம்பர் 25) வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: "வேலைவாய்ப்பின்மை உதவித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் தற்காலிகமாக பணியாற்றி வரும் தட்டச்சர்கள் இடமிருந்து தட்டச்சர் பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மொத்தம் 50 தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்காக டிசம்பர் 8ம் தேதி சிறப்பு போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 25ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கியது. இது டிசம்பர் 24ம் தேதி முடிவடைகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் தற்போது தற்காலிகமாக தட்டச்சராக பணியாற்றுவோர் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் ஹையர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.

அல்லது ஏதேனும் ஒன்றில் ஹையர் மற்றொன்றில் லோயர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி, பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி மற்றும் டிசி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற விதவைகள் எனில் வயது வரம்பு 37 ஆகும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித்தகுதியை (10-ம் வகுப்பு தேர்ச்சி) விட கூடுதல் கல்வித்தகுதி (பிளஸ் 2, டிப்ளமா, பட்டப்படிப்பு) இருந்தால் அத்தகையோருக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

அவர்கள் 60 வயது வரை விண்ணப்பிக்கலாம். சிறப்பு போட்டித்தேர்வில் தமிழ் பாடத்தில் இருந்து 100 கேள்விகளும் பொது அறிவு மற்றும் நுண்ணறிவு பாடத்தில் இருந்து 100 கேள்விகளும் ஆக மொத்த 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு தலா ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். தேர்வு கணினி வழியில் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். இதில் குறைந்த பட்சம் 90 மதிப்பெண் பெற்றால் (அனைத்து வகுப்பினருக்கும்) பணிக்கு தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விரிவாக அறிந்துகொள்ளலாம்” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x