Published : 19 Jun 2024 08:21 PM
Last Updated : 19 Jun 2024 08:21 PM

யுஜிசி நெட் தேர்வு: கார்பன் காப்பி இல்லாமல் ஓஎம்ஆர் சீட் தேர்வு முறை குறித்து தேர்வர்கள் அச்சம்

திருச்சி : யுஜிசி நெட் தேர்வு ஓஎம்ஆர் (OMR) சீட் முறையில் நடைபெற்றது. கார்பன் காப்பி இல்லாமல் வழங்கப்பட்டதால் இத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீது பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெருவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கான தேர்வு மையமாக திருச்சி புத்தனாம்பட்டியில் உள்ள நேரு நினைவு கல்லூரி செயல்பட்டது. இதில் 2 ஷிப்ட்களாக நடைபெற்ற தேர்வை 3600 பேர் எழுதினர்.

கடந்த சில ஆண்டுகளாக கணினி வழியாக நடைபெற்ற நெட் தேர்வு இம்முறை ஓஎம்ஆர் சீட் முறையில் நடைபெற்றுள்ளது. ஓஎம்ஆர் சீட்டில் விடைகளை குறிக்க தேர்வு முகமை சார்பில் வழங்கப்பட்ட பால்பாயிண்ட் பேனா மிகவும் தரமற்றதாக இருந்ததாகவும், அதைக் கொண்டு விடையை ஷேட் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டதாக தேர்வர்கள் பலர் குற்றச்சாட்டினர்.ஓஎம்ஆர் சீட் கார்பன் காப்பி இல்லாமல் வழங்கப்பட்டதால் இத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீது பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

இது தவிர புத்தனாம்பட்டி தேர்வு மையத்தில் தேர்வறைகள் நெருக்கடியாக இருந்தது. மின் விசிறிகள் பல செயல்படவில்லை. கல்லூரி வளாகம் அருகே உணவகம் எதுவும் இல்லாததால் தேர்வர்கள் மற்றும் உடன் வந்தவர்கள் 12 கி.மீ தொலைவில் உள்ள துறையூருக்குச் சென்று சாப்பிட்டு வந்ததாக கூறுகின்றனர்.திருச்சி மாநகரிலும் தேர்வர்கள் மிக எளிதாக வந்து செல்ல வசதியாக முக்கிய சாலைகளை ஒட்டி பல்வேறு வசதிகள் கொண்ட ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளநிலையில், போதிய வசதிகளற்ற கிராமப்பகுதியில் பல்வேறு மாவட்டங்களுக்கான தேர்வு மையமாக இந்த மையத்தை தேர்வு செய்தது ஏன் என தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமையின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் பேகம் இந்து தமிழ் நாளிதழிடம் கூறியது: “திருச்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு ஷிப்டுகளில் 3600 பேர் நெட் தேர்வை எழுதினர். இதற்கு முன் ஜூன் 9 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை இந்த தேர்வு மையத்தில் 3 ஆயிரம் பேர் எழுதினர். அதைத்தொடர்ந்து நெட் தேர்வும் இங்கு நடைபெற்றது. திருச்சி மாநகரில் இருந்து 15 நிமிடத்துக்கு ஒரு பேருந்து தேர்வு மையத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரி வளாகத்தில் கேண்டீன் வசதி இருந்தது. நான் தேர்வு மையத்தில்தான் இரவு 10 மணிவரை இருந்தேன். அசவுகரியம் குறைவு குறித்து ஒருவரும் என்னிடம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இம்முறை நெட் தேர்வு ஓஎம்ஆர் சீட் முறையில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு ஓஎம்ஆர் சீட்டில் கார்பன் காப்பி வசதி செய்யப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x