Published : 25 Apr 2024 06:01 AM
Last Updated : 25 Apr 2024 06:01 AM

மின்வாரியத்தில் பல்வேறு பணிகளுக்கு செலுத்திய தேர்வு கட்டணத்தை மே 5-ம் தேதிக்குள் திரும்ப பெறலாம்

சென்னை: மின்வாரியத்தில் பல்வேறு பணிகளுக்கு செலுத்திய தேர்வுக் கட்டணத்தைத் திரும்ப பெற வரும் மே 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் 600 உதவிப் பொறியாளர், 500 இளநிலை பொறியாளர், 1,300 கணக்கீட்டாளர், 2,900 கள உதவியாளர் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தேர்வு கட்டணமாக பொதுப் பிரிவினரிடம் ஆயிரம் ரூபாயும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் ரூ.500-ம் வசூலிக்கப்பட்டது.

அதே ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவல் ஏற்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு இறுதி வரை ஊரடங்கு நீடித்தது. அதற்கு அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனால், மின்வாரிய தேர்வுகள் நடைபெறவில்லை.

தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து மின்வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களுக்கான ஆட்கள் தேர்வு, அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வுநடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால், 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆட்கள் தேர்வு அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக 2022-ம் ஆண்டு ஜூலைமாதம் மின்வாரியம் அறிவித்தது. வசூலிக்கப்பட்ட தேர்வுக்கட்டணத்தை விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குக்கு திருப்பிஅனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு மின்வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இன்னும் பலர் தங்களின் விபரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.

இந்நிலையில், தேர்வுக் கட்டணத்தை திரும்பப் பெற விரும்புவோர் வரும் மே 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x