Published : 10 Apr 2024 05:35 AM
Last Updated : 10 Apr 2024 05:35 AM
சென்னை: நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர், அரசுத் துறை உதவியாளர் உள்ளிட்ட குரூப்-2 ஏபதவிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 40,328 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குரூப்-2, குரூப்-2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த 2023 பிப்ரவரி 25-ம் தேதி நடத்தப்பட்டது. அதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் குரூப்-2 பிரிவில் சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 116 இடங்களுக்கு நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேர்காணல் அல்லாத குரூப்-2ஏ பதவிகளுக்கு (மொத்தம் 5,990 காலி இடங்கள்) கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்காக தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல்,தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில் நேர்முக எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு 392 பேரும், இதர அனைத்து பதவிகளுக்கு 39,936 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நகராட்சி ஆணையர் (கிரேடு-2), தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), கூட்டுறவுசங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர், வணிகவரி உள்ளிட்ட துறைகளில் உதவியாளர் போன்றபதவிகள் குரூப்-2ஏ பதவிகளின்கீழ் வருகின்றன. இந்த பதவிகளுக்கான தேர்வில் நேர்காணல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
குருப்-1 தரவரிசை வெளியீடு: இதற்கிடையே, குரூப்- 1 பதவியில் 95 காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு மார்ச்26 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்பட்டு அதன் தரவரிசை பட்டியலையும் (எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT