Published : 15 Mar 2024 05:35 AM
Last Updated : 15 Mar 2024 05:35 AM
சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆகஸ்ட்4-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்படும் என்றும் அதற்கு மார்ச் 28 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக்குகள் போன்றுஅரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என கடந்த ஆண்டு உயர்கல்வித் துறை அறிவித்தது.
அதைத்தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2024-ம்ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றும், போட்டித்தேர்வு ஜுன் மாதம் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அறிவிக்கப்பட்டபடி உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியிடப்படாததால் பி.எச்டி. பட்டதாரிகளும், ஸ்லெட், நெட் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உளவியல், சமூகவியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் 4 ஆயிரம் காலியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்.29-ம் தேதி முடிவடைகிறது. போட்டித்தேர்வு ஆக.4-ம் தேதி நடைபெற உள்ளது.
உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலை பட்டமும்அதோடு ஸ்லெட் அல்லது நெட்தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பி.எச்டி. முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு 57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வுமுறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT