Published : 24 Jan 2024 04:02 AM
Last Updated : 24 Jan 2024 04:02 AM

உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மானியத்துடன் கடனுதவி

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜக்டே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ( தாட்கோ ) மூலம், ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதுவாக, உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சொந்தமாக கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கும், இடம் இல்லாதவர்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்து தரப்பட்டு, உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்தும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கையும் தயார் செய்து இலவச ஆலோசனைகள் தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான உரிமையாளர் கட்டணத்தில் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.

உடற்பயிற்சி சிகிச்சை பயிற்சியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். தகுதியுள்ள நபர்கள் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றிதழ்களுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். உடற்பயிற்சி சிகிச்சை ( Physiotheraphy ) பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்தொழிலுக்கு ரூ.6 லட்சம் திட்டத் தொகையை நிர்ணயித்து, இதற்குரிய மானியமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவியாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x