Published : 24 Jan 2024 04:14 AM
Last Updated : 24 Jan 2024 04:14 AM
தூத்துக்குடி: மீனவர்களின் வாரிசுகள் கடற்படை, கடலோர காவல் படையில் சேருவதற்கு தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரால் 90 நாள் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சிக்கு தகுதியான நபர்கள் பிப்ரவரி 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையின் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக மீனவர்களின் வாரிசுகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக 90 நாள் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படவுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கு தகுதியான விண்ணப்பதார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விண்ணப்பங்களை 08.02.2024 மாலை 17.45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அருகில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையங்களிலும், மீன்வளத்துறை அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
எஸ்சி , எஸ்சி (ஏ) மற்றும் எஸ்டி பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 27 ஆகும். எம்பிசி, டிசிபிசிபிசிஎம் பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 25 ஆகும். மற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 22 ஆகும். கல்வித் தகுதி: 10 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்த மதிப்பெண்களில் 50 சதவீதத்துக்கு கூடுதலாக இருக்க வேண்டும் (கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்துக்கு கூடுதலாக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்).
உடற்கூறு அளவுகள்: உயரம் குறைந்த அளவு 157 செமீ., இருத்தல் வேண்டும். மலைவாழ் மற்றும் பழங்குடியினருக்கு குறைந்தபட்ச உயரம் அளவில் மத்திய அரசின் ஆணையின்படி தளர்வு அளிக்கப்படும். மார்பளவு அனைத்து வகுப்பினருக்கும் சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செமீ., இருக்க வேண்டும் மூச்சடக்கிய நிலையில் குறைந்த பட்சம் 5 செ.மீ. மார்பக விரிவாக்கம் இருத்தல் வேண்டும். உரிய கல்வித் தகுதியும், உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர்களின் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT