Published : 08 Jan 2024 04:00 AM
Last Updated : 08 Jan 2024 04:00 AM
கோவை / திருப்பூர்: சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோவை நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் மூலம் 22 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை கிடைக்கும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. கோவை, விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள டைடல் பூங்கா வளாகத்தில் நேரடி ஒளிபரப்பை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்ட தொழில் முனைவோர் பலர் பார்வை யிட்டனர். தவிர பல பள்ளி, கல்லூரி வளாகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் நேரலை காண ஏற்பாடு செய்யப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய தொழில் தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர இடர்நீக்க குழு மூலம் தேவையான ஒப்புதல்கள் பெறவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021ன் படி, தகுதியான நிறுவனங்கள் உரிய அரசு மானியங்கள் பெறவும், கோவை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த 211 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் ரூ.6,575.95 கோடி முதலீட்டில் புதிய மற்றும் விரிவாக்கம் செய்ய முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி பெறும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். 22 ஆயிரத்து 35 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் கூறும்போது, “திருப்பூரில், குறுந் தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.111.5 கோடி மதிப்பிலான 37 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறு தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.6,374.34 கோடி மதிப்பிலான 397 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.117.4 கோடி மதிப்பிலான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் ரூ.6,603.24 கோடி மதிப்பிலான 439 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT