Published : 08 Jan 2024 04:14 AM
Last Updated : 08 Jan 2024 04:14 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி / தென்காசி / திருநெல்வேலி: சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.26 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க இரண்டு பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கியது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநாடு தொடக்க நிகழ்வை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நேரலையில் பார்ப்பதற்கு மாவட்டத்தில் 7 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உலக முதலீட்டாளர் மாநாட்டு தொடக்க விழா நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் முன்னிலையில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதேபோல் வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடியில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களால் 8 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இது மகிழ்ச்சியான செய்தியாகும். அதி கனமழையால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்குவதற்கும், வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் காப்பீடு பெறுவதற்கும் முதல்வர் ஏற்பாடுகள் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் மழை பெய்தாலே இங்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தாமிரபரணி ஆறு வைகுண்டம் வழியாகத்தான் வருகிறது. எனவே தென்பகுதியில் உள்ளவர்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். கயத்தாறில் உள்ள தண்ணீரும் உப்பாறு ஓடைக்கு தான் வருகிறது. வீடுகள், படகுகளை இழந்தவர்களுக்கு தனியாக திட்டம் உள்ளது. மீட்பு பணிகளை முடிப்பதற்கே 15 நாட்கள் ஆகிவிட்டது.

காப்பீடு செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் நிறைய குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். ஒவ்வொரு துறையாக ஆலோசனை செய்திருக்கிறோம். அவர்களுக்கு என்னென்ன திட்டங்களில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று தெரியாமல் இருக்கலாம். அது தொடர்பான வேலைகளை இப்போது செய்து வருகிறோம் என்றார். நிழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கல்லூரிகளில் நேரலையில் ஒளிபரப்பு: சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுடன் ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் பார்வையிட்டார். சுரண்டை காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, திருநெல்வேலி ராணி அண்ணா மகளிர் கல்லூரி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் முதலீட்டாளர்கள் மாநாடு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. சதக்கத்துல்லா கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன், கல்லூரி முதல்வர் அப்துல் காதர், கலைப்புல முதன்மையர் முஹமது ஹனீப், மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x