Published : 03 Jan 2024 05:00 PM
Last Updated : 03 Jan 2024 05:00 PM

போட்டித் தேர்வர்கள் கவனத்துக்கு... மதுரையில் ரூ.2.5 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம்!

மதுரை: மதுரையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயன் அளிக்கும் வகையில், ரூ.2.5 கோடியில் மாநகராட்சியின் 'நூலகம் மற்றும் அறிவுசார் மையம்' அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி நீச்சல் குளம் அருகே உள்ள படிப்பகம், காந்தி அருங்காட்சியகம், கே.கே.நகர் மாநகராட்சி பூங்கா மற்றும் கலைஞர் நூலகம் போன்ற பொது இடங்களில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், காலை முதல் இரவு வரை அமர்ந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறார்கள். அவர்களில் சிலர் வெற்றி பெற்று அரசு பணிகளுக்கு சென்று வருகிறார்கள். மற்றவர்கள் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு வழிகாட்டுதலுடன் பயிற்சியும் வழங்குவதற்கு மதுரை மாநகராட்சி ஒரு சிறப்பான முயற்சியை முன்னெடுத்துள்ளது.

அவர்களுக்காக மாநகராட்சி நிர்வாகம், தமுக்கம் மைதானம் அருகே முன்பு இரு சக்கர வாகன காப்பகமாக இருந்த இடத்தை சீர்திருத்தி, அதில், ரூ.2.5 கோடியில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட நூலகத்துடன் கூடிய 7,500 சதுர அடியில் அறிவுசார் மையம் அமைத்துள்ளது.

இந்த அறிவுசார் மையத்தில், `யூபிஎஸ்சி (UPSC), டிஎன்பிஎஸ்சி (TNPSC) டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கித்தேர்வு நிறுவனம், ஆர்ஆர்பி ஆகிய தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு சிறந்த போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள், வெற்றியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளுக்கு சென்றவர்களையும் அழைத்து வந்து பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''கல்லூரி படிப்பு முடிக்கும் இளைஞர்களுக்கு அரசு பணி என்பது ஒரு பெரும் கனவாக உள்ளது. அந்த கனவு நிறைவேற, வசதிப் படைத்தவர்கள், தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையங்களுக்கு சென்று தயாராகிறார்கள். வசதியில்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள், வீட்டில் இருந்தபடியேயும், நண்பர்களுடன் கலந்துரையாடியும் வழிகாட்டுதலும், பயிற்சியும் இல்லாமல் சுயமாக தயாராகிறார்கள்.

தொடர் பயிற்சியும், கடந்த கால போட்டித்தேர்வு வினாத்தாள்களும் மட்டுமே அவர்களுடைய ஒரே துருப்பு சீட்டாக உள்ளது. தற்போது அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளநிலையில் அதற்கு தயாராகும் இளைஞர்களுக்கு இந்த அறிவுசார் மையத்தில் பயிற்சியும் வழிகாட்டுதலும், போட்டித் தேர்வுக்கான அனைத்து வகை புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன.

போட்டிதேர்வர்கள், இந்த நூலகத்தில் அமர்ந்து படித்து, அங்குள்ள அறிவுசார் மையத்தில் தினமும் இலவசமாக நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.2.5 கோடியில் இந்த நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் கலந்துரையாடல் அரங்கம், நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமண முடிந்து போட்டித்தேர்வுக்கு தயாராகுவோர் அவர்கள் குழந்தைகளுடன் வந்தால் அவர்கள் விளையாடுவதற்கு கிட்ஸ் வகுப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில், போட்டித்தேர்வர்கள் அமர்ந்து படிப்பதற்கு இன்டர்நெட் வசதியுடன் ஸ்மார்ட் படிக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த நூலகத்தில் செய்து கொடுக்கப்பட உள்ளது. தற்போது இந்த நூலகமும், அறிவுசார் மையமும் வரும் 5ம் தேதி திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x