Published : 17 Dec 2023 04:04 AM
Last Updated : 17 Dec 2023 04:04 AM
கோவை: இந்திய வனப்பணி நமது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பை வழங்குகிறது என கோவை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி சதீஷ் பேசினார்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ‘தூய எதிர்காலத்துக்கு பசுமை பணிகள்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
கோவை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி சதீஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: இந்திய வனப்பணி ஒரு அகில இந்திய பணி. மூன்று கட்டங்களாக மத்திய பொதுப்பணி ஆணைத்தால் இத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்திய வனப் பணிக்கும் குடிமைப் பணிக்கும் முதல் நிலை தேர்வு பொதுவான தேர்வாகும். மத்திய பொதுப்பணி தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் மாநில அரசாங்கங்களில் பணியாற்றுவர். மாநில அரசாங்கம் இந்திய வனப்பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்யலாம்.
ஆனால் இந்திய வனப்பணி அதிகாரிகளை பணி நீக்கம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. வனப் பணி அதிகாரிகள் நாடு முழுவதும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் சொந்த மாநிலத்தில் பணியாற்ற முடியாது. மற்ற மாநிலத்தில் தான் பணியாற்ற வேண்டும். கடின உழைப்பு இருந்தால் மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற முடியும். இந்திய வனப்பணி நமது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வழங்குகிறது.
இந்திய வனப்பணி அதிகாரிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றிய பின் மத்திய அரசுக்கு மாற்றுப் பணியில் செல்லலாம். இயற்கை, காடுகள், காட்டுயிர் மீது ஆர்வம் உள்ளவர்கள் இந்திய வனப்பணியை தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். அரசு கலைக் கல்லூரியின் அரசியல் துறை தலைவரும் இலவச ஐஏஎஸ் தேர்வு பயிற்சியை வழங்கி வருபவருமான பேராசிரியர் கனகராஜ் கூறும்போது, ‘‘அகில இந்திய பணிகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த இருபது ஆண்டுகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய பணிகளில் தமிழகத்தின் பொற்காலம் என்று கூறலாம். அகில இந்திய பணிகளில் மூன்று கட்டங்களில் தேர்வு நடத்தப்பட்டாலும் கடைசி கட்டமான நேர்காணல் மிக முக்கியமானது. தமிழக மாணவ, மாணவிகள் நேர்காணலில் சற்று தடுமாறும் நிலை காணப்படுகிறது. இப்பிரச்சினையை வெல்ல வேண்டும் என்றால் மாணவர்கள் தங்களது தகவல் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT