Last Updated : 13 Dec, 2023 03:30 PM

 

Published : 13 Dec 2023 03:30 PM
Last Updated : 13 Dec 2023 03:30 PM

‘9 ஆண்டுகால பணிக்கு ஓர் அங்கீகாரம்’ - 10 தூய்மைப் பணியாளர்கள் @ கடலூர் ஆட்சியர் அலுவலகம்

கடலூர் ஆட்சியர் அலுவலக தூய்மைப் பணியாளர்கள்.

விருத்தாசலம்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, 9 ஆண்டுகளுக்குப் பின் தொகுப்பூதியம் கிடைக்க வழிவகை செய்து கொடுத்துள்ளார் ஆட்சியர். கடலூர் புதிய ஆட்சியர் அலவலகம் கஸ்டம்ஸ் சாலையில் இயங்கி வருகிறது. இந்தக் கட்டிடத்தில் சுமார் 250 அறைகள் உள்ளன. இந்த அலுவலக அறைகள் தரை மற்றும் இரு மேல் தளங்களில் இயங்கி வருகின்றன. 3 தளங்களிலும் கழிப்பறை வசதிகள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு முதல் இங்கு புதிய ஆட்சியர் அலுவலகம் இயங்கி வரும் நிலையில், ஒப்பந்த அடிப்படையில் 10 தூய்மைப் பணியாளர்கள் இங்கு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு சில மாதங்களே ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் முடிந்துவிட, அவர்களின் நிலை கேள்விக்குறியானது.

இருப்பினும் தன்னார்வமாக தொடர்ந்து இந்த 10 பேரும் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். அலுவலக அறைகளை சுத்தம் செய்யும் போது, அங்குள்ள அரசு ஊழியர்கள் சொற்பமாக வழங்கும் தொகையே இவர்களின் ஊதியமாக இருந்து வந்துள்ளது. ‘ஆட்சியர் அலுவலகமாயிற்றே! எப்படியும் பணி நிரந்தரம் செய்து விடுவார்கள்’ என்ற கனவில் அவர்களும், ஊதியப் பேச்சை எடுக்காமல், தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளனர்.

இந்தநிலையில் இவர்களின் தற்போதைய நிலையை அறிந்த ஆட்சியர் அருண் தம்புராஜ், அவர்களுக்கு மாத ஊதியத்துக்கு வழிவகை செய்யுமாறு தனது நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரனிடம் பணித்துள்ளார். இதையடுத்து அவரும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.9,500 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊதியம் நவம்பர் மாதம் முதல் கணக்கிட்டு இம்மாதத்தில் விரைவில் வழங்கப்பட உள்ளது. முதன்முதலாக ரூ.9,500 பெறவுள்ள 10 தூய்மைப் பணியாளர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

“கடந்த 9 ஆண்டுகளாக இங்கு பணி செய்து வருகிறோம். இதற்கு முன் காலை 9 மணிக்கு வருவோம், அலுவலகங்களையும் கழிப்பறைகளையும் தூய்மை செய்து விட்டு 11 மணிக்கெல்லாம் சென்று விடுவோம். தற்போது எங்களுக்கான பணி நேரத்தை அதிகரித்து, காலை 9 முதல் மாலை 4 மணி வரை என நிர்ணயித்து, அதற்காக முறையாக ஒரு ஊதியத்தையும் நிர்ணயித்துள்ளனர். 9 ஆண்டுகால பணிக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தனர்.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான பணி என்பது ஏறக்குறைய ஒரு முழுநேர பணியே. ஒரு முழு நேர பணிக்கு தொடக்க நிலையில் இந்த தொகுப்பூதியம் சரியானதே. ஆனால், காலப்போக்கில் இவர்களை மற்ற பிற ஊழியர்களைப் போல பணிவரன்முறைக்குள் கொண்டு வந்து, பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். ‘கடந்த 9 ஆண்டு கால உழைப்பு; இந்த தொகுப்பூதிய அறிவிப்பால் இன்னும் முகமலர்ச்சியோடு பணியாற்ற விரும்பும் இவர்களின் ஆர்வம்; இதையெல்லாம் கணக்கிலிட்டு வருங்காலத்தில் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்புண்டா?’ என்று கேட்ட போது விவரமறிந்த அரசு வட்டாரங்கள் ‘வாய்ப்பில்லை’ என்றே பதில் தருகிறது.

“தமிழக அளவில் உள்ள அனைத்து உள்ளாட்சி நிர்வாக மட்டத்திலும், தூய்மைப் பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையிலேயே பணியாற்றுகின்றனர். தூய்மைப் பணியாளர்களுக்கான அரசின் பணித்தேர்வு திட்ட வரைமுறைகளே ஏறக்குறைய அப்படி ஆகிவிட்டது. சில ஆட்சியர் அலுவலகங்களுக்கு தேவை யான தூய்மைப் பணிக்காக, அங்குள்ள நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் அவசரத்தேவைக்கு ஆட்களை அனுப்பி வைப்பதும், அதைக் கொண்டு பணிகள் நடைபெறுவதுமாகவே உள்ளன. இந்தச் சூழலில், இந்த 10 பேரும் கடந்த 9 ஆண்டுகளாக பகுதி நேரமாக இந்தப் பணியை செய்து வந்துள்ளனர். இப்போது இவர்களை அங்கீரிக்கும் வகையில் அவர்களை தொகுப்பூதிய நிலைக்கு ஆட்சியரே விருப்பப்பட்டு கொண்டு வந்திருக்கிறார். அவரால் இயன்றது அதுவே..

இதைத் தாண்டி, நிரந்தர ஊழியர் என்ற நிலை பெற, தமிழக அரசு தூய்மைப் பணிக்கான தேர்வு செய்யும் முறைகளை மாற்றினால், அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் இந்த 10 பேர் மட்டுமல்ல.. பல ஊர்களில் நீண்ட காலம் வேலை பார்க்கும் இதுபோன்ற பல தூய்மைப் பணியாளர்கள் பயனடையலாம்” என்று விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தொகுப்பூதிய அங்கீகாரம் என்பது முழுமையானதல்ல; ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பிற ஊழியர்களைப் போல் இவர்களும் நிரந்தர பணியாளர்கள் என்ற நிலைக்கு வர வேண்டும். அந்த நல்ல நகர்வுக்கு ஆட்சியர் இப்போது செய்துள்ள இந்த தொகுப்பூதிய முயற்சி நல்ல அச்சாரமாக அமையட்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x