Published : 23 Nov 2023 08:53 AM
Last Updated : 23 Nov 2023 08:53 AM
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, சென்னையில் 4-வது தனியார் வேலைவாய்ப்பு முகாம் தமிழக அரசு சார்பில் வரும் 25-ம் தேதி கொட்டிவாக்கத்தில் நடைபெறுகிறது.
இதுகுறி்த்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் 100 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில், சென்னை மாவட்டத்தின் 4-வது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.25-ம் தேதி, கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளியில் காலை 8 முதல் மாலை 3 மணிவரை நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, பட்டயம் படித்தவர்கள், ஐடிஐ, தொழிற்கல்வி டிப்ளமோ, பொறியியல் பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்துவித தகுதியுள்ளவர்களும் பங்கேற்கலாம். இம்முகாமில் பங்கேற்க கட்டணம் கிடையாது.
மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின்தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கி வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன முகாமில் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள அனைவரும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். மேலும், தனியார் துறையில் பணியமர்த்தப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது.
இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ pjpsanthome@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்புகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT