Published : 20 Nov 2023 02:32 PM
Last Updated : 20 Nov 2023 02:32 PM

Job Alert | தி.மலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை: கூட்டுறவு சங்கங்களில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு டிச.1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் கோ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணி யாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகங்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் உள்ளிட்ட சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான அறிவிப்பை, திருவண்ணாமலை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் கடந்த 10-ம் தேதி வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://drbtvmalai.net என்ற இணையதளம் வழியாக டிசம்பர் 1-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 24-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

புனே வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத் தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் உள்ளவர்கள், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24-ம் ஆண்டில் நேரடி பயிற்சி, அஞ்சல் வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். இதர அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ் உள்ளிட்ட பாடங்களை கொண்டு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

200 வினாக்களுடன், 170 மதிப் பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள் அச்சடிக்கப்பட்டிருக்கும். எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். மேலும் விவரங்கள், https://drbtvmalai.net எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x