Published : 31 Oct 2023 05:50 AM
Last Updated : 31 Oct 2023 05:50 AM

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு - இலவச பயிற்சி பெற நவ.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் வாயிலாக, 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு 2024 ஜனவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு http://www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நாளை (நவ.1) முதல் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று பி.எட்.,-ல் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, ஆசிரியர் தகுதி தேர்வு சான்று (டெட் சான்று) பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகளின் விவரங்களை http://www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். இத்தேர்வுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் ஸ்மார்ட் போர்டு, இலவச வைஃபை, அனைத்து போட்டித்தேர்வு களுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர் களுக்கு மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.எனவே, நவம்பர் 10-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது https://forms.gle/FNHXWyiuCra G1AoL8 கூகுள் லிங்க் வாயிலாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x