Published : 30 Oct 2023 04:08 AM
Last Updated : 30 Oct 2023 04:08 AM
சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்- நடத்துநர் (டிசிசி) பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நவ.19-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு 685 ஓட்டுநர் – நடத்துநர் (டிசிசி) பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப் பட்டது.
அதன்படி, 685 ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆக.19 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. செப்.19-ம் தேதியுடன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்தது.
இப்பணிகளுக்கு 11 ஆயிரம் பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதி வாய்ந்த 1,600 பேர் குறித்த விவரங்கள் வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.
இது குறித்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நேரடி நியமனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட விருக்கும் ஓட்டுநர்- நடத்துநர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்பட்டு விண்ணப்பம் சமர்ப் பித்துள்ளவர்களுக்கும் ஏற்கெனவே விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்
உள்ள 10 தேர்வு மையங்களில் நவ.19-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்கள் நவ.13 முதல் www.arasubus.tn.gov.in இணையதளம் மூலம் தேர்வு அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு அனுமதி சீட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தபாலில் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் - நடத்துநர் பணிக்கு முதன் முறையாக எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான பாடத் திட்டங்கள் மற்றும் தேர்வு நடைமுறை குறித்த விவரங்கள் ஏற்கெனவே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT