Published : 27 Oct 2023 04:42 PM
Last Updated : 27 Oct 2023 04:42 PM
புதுக்கோட்டை: ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் வயது வரம்பை உயர்த்தியது போல, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும் என தேர்வுக்கு தயாராகி வருவோர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்1 தேர்வு வயது வரம்பு 21 முதல் 39-க்குள் இருக்க வேண்டும். இத்தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய 3 கட்டங்களாக நடைபெறும். இத்தேர்வுக்கான வயது உச்ச வரம்பானது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மிகக் குறைவாக இருப்பதால், இதை உயர்த்த வேண்டும் என போட்டித் தேர்வு எழுதுவோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போட்டித் தேர்வு எழுதுவோர் கூறியது: முந்தைய திமுக ஆட்சியில் (2006-2011) குரூப் 1 தேர்வுக்கு வயது உச்ச வரம்பு 40ஆக இருந்தது. அதன் பிறகு அதிமுக ஆட்சியில் வயது வரம்பு 35 ஆக குறைக்கப்பட்டது. அப்போது, வயது வரம்பை 45ஆக உயர்த்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கரோனா காலகட்டத்தில் தேர்வுகள் நடத்தப்படாததால் 2 முறை தலா 2 ஆண்டுகள் மட்டுமே வயது வரம்பு உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போது ஆந்திரா, தெலங்கானா, கேரளா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குரூப் 1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 45 முதல் 49 வரை உள்ளது.
தமிழகத்தில் கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த குரூப் 1 தேர்வுகளில் தேர்வு அறிவிப்பில் இருந்து முடிவுகள் வெளிவர சராசரியாக 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆனது. இதனால் தேர்வு எழுதும் வாய்ப்புகள் குறைந்ததுடன், தேர்வர்களின் வயது வரம்பும் கடந்து போனது. இதனிடையே, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு பொதுப்பிரிவு அல்லாத இதர பிரிவினருக்கான வயது வரம்பை 58 என உயர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. ஆனால், குரூப் 1 தேர்வு எழுதும் தேர்வர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. விரைவில் குரூப் 1 தேர்வு அறிவிக்கை வெளியிட வாய்ப்பு உள்ளதால், அதற்குள் தேர்வு எழுதும் வயது வரம்பை 45ஆக உயர்த்தி முதல்வர் அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக 39 வயதை கடந்த போட்டித் தேர்வு எழுதுவோர் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT