Published : 30 Jul 2023 04:05 AM
Last Updated : 30 Jul 2023 04:05 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை ஆக. 5-ம் தேதி நடத்த உள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் ஆக. 5-ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான மனித வளத் தேவைக்கு நேர்முக தேர்வை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பிளஸ் 2, 10-ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
18 முதல்35 வயது வரை உள்ள வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் ஆக. 5-ம் தேதி காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT