Published : 18 Jul 2023 06:11 PM
Last Updated : 18 Jul 2023 06:11 PM

அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிக்கு சென்னையில் ஜூலை 24-ல் நேர்காணல்

சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களுக்கான நேர்காணல் வரும் ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நேர்காணலில் கலந்துகொள்ள தேவையான தகுதிகளை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின், எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017, என்ற முகவரியில் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 24.07.2023 அன்று 10 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

தேவையான தகுதிகள்:

  • கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை
  • பிரிவுகள்: சுய தொழில் செய்யும், வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விரும்பத்தக்க தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள், சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.
  • மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகவும். நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் [NSC] அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை [KVP] பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x