Published : 01 Jun 2023 12:33 PM
Last Updated : 01 Jun 2023 12:33 PM
நியூயார்க்: மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆகியுள்ளார் டெஸ்லா மற்றும் ட்விட்டர் நிறுவன சிஇஓ எலான் மஸ்க். இதன் மூலம் பெர்னார்ட் அர்னால்ட்டை அவர் முந்தியுள்ளார். பெர்னார்ட் அர்னால்ட்டின் எல்விஎம்ஹெச் பங்குகளின் சந்தை மதிப்பு சரிந்த காரணத்தால் முதல் இடத்திற்கு மஸ்க் முந்தியுள்ளார்.
எல்விஎம்ஹெச் பங்கின் மதிப்பில் சுமார் 2.6 சதவீதம் என்ற எண்ணிக்கையில் நேற்று (புதன்கிழமை) சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுமார் 10 சதவீதம் அந்நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு வீழ்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல். 74 வயதான பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து மதிப்பில் ஒரே நாளில் சுமார் 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.
தற்போது ப்ளூம்பெர்க் நிகழ் நேர உலக பணக்காரர்கள் பட்டியலில் 192 பில்லியன் டாலர்களுடன் முதல் இடத்தில் உள்ளார் மஸ்க். இரண்டாம் இடத்தில் உள்ள பெர்னார்ட் அர்னால்ட், 187 பில்லியன் டாலர்களை தனது சொத்து மதிப்பாக கொண்டுள்ளார். கடந்த 2022 டிசம்பரில் உலக பணக்காரர்கள் பட்டியலில் மஸ்கை முந்தினார் பெர்னார்ட் அர்னால்ட். அப்போது டெஸ்லா நிறுவன பங்குகளின் மதிப்பு சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மஸ்க், ட்விட்டர் தளத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கி இருந்தார். அந்த நிறுவனத்தில் அவரது முழு கவனமும் இருந்து வருகிறது. அதனால் டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் கவலை கொண்டனர். அதன் விளைவாக பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டது. இருந்தும் நடப்பு ஆண்டில் டெஸ்லா பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நியூராலிங்க் போன்ற நிறுவனங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT