Published : 31 May 2023 05:36 PM
Last Updated : 31 May 2023 05:36 PM
புதுடெல்லி: புது டெல்லியில் உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் பிராந்திய அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், யுனிவர்சல் போஸ்டல் யூனியன் (Universal Postal Union) எனப்படும் உலகளாவிய பிராந்திய அலுவலகத்தை புது டெல்லியில் நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. UPU - உடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம், பிராந்தியத்தில் மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடும்.
தெற்கு - தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து, அஞ்சல் துறையில் பலதரப்பு நிறுவனங்களில் இந்தியா பங்களிக்க இந்த ஒப்புதல் உதவும்.
UPU–வின் பிராந்திய அலுவலகத்திற்கு ஒரு கள திட்ட நிபுணர், பணியாளர்கள் மற்றும் அலுவலகத்தை இந்தியா வழங்கும்.
திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகள், அஞ்சல் சேவைகளின் செயல்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல், தபால் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், மின் வணிகம் மற்றும் வர்த்தக மேம்பாடு போன்ற திட்டங்கள் UPU உடன் இணைந்து இந்த அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
இம்முயற்சி மற்ற நாடுகளுடனான இந்தியாவின் தூதரக ரீதியிலான உறவுகளை விரிவுபடுத்த உதவும். குறிப்பாக ஆசிய - பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகளாவிய அஞ்சல் மன்றங்களில் இந்தியாவின் இருப்பை இது மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT