Published : 30 May 2023 03:39 PM
Last Updated : 30 May 2023 03:39 PM

இந்தியாவில் முதல் முறை | ஜப்பானின் ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் தமிழகத்தில் ரூ.128 கோடி முதலீடு

சென்னை: ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக, தமிழகத்தில் ரூ.128 கோடி முதலீட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற முதல்வர், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டின் உள்ள ஒசாகாவில் தனது அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது டோக்கியோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணங்களின்போது முதல்வர், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொண்டார்.

ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை நிறுவிட முதல்வர் முன்னிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஓம்ரான் (OMRON) நிறுவனம், தொழில்துறை ஆட்டோமேஷன், ஹெல்த்கேர், மின்னணு பாகங்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, ஓம்ரான் நிறுவனம் சுமார் 120 நாடுகளுக்கு தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.

ஓம்ரான் கார்பரேஷனின் ஒரு பிரிவான ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம், டிஜிட்டல் இரத்த அழுத்த மானிட்டர்கள், சுவாச சிகிச்சைக்கான நெபுலைசர்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்வதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம், குறைந்த அதிர்வெண் வலி சிகிச்சை உபகரணங்கள் (low-frequency pain therapy equipment), மின்னணு வெப்பமானிகள், உடல் அமைப்பு மானிட்டர்கள் (body composition monitors) உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம் தமிழகத்தில் மருத்துவச் உபகரணங்களை தயாரிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் இடையே, 128 கோடி ரூபாய் முதலீட்டில் தானியங்கி இரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், உலகின் முன்னணி நிறுவனமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவின் முதல் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,"ஓம்ரான் நிறுவனத்தின் முதலீடு, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை மீதான தங்களின் நம்பிக்கையை மட்டுமின்றி, வெற்றிகரமான அதன் மருத்துவ கட்டமைப்பின் மீதான உங்கள் நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

தமிழகம் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய தரமான மருத்துவ சேவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மருத்துவத் துறைக்கான உற்பத்தி தொழிலை தொடங்குவதன் மூலம் எங்கள் மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஓம்ரான் நிறுவனம் முக்கிய பங்காற்ற இருக்கிறது. தங்களது முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x