Published : 30 May 2023 02:14 PM
Last Updated : 30 May 2023 02:14 PM

2023-24-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர வாய்ப்பு: ரிசர்வ் வங்கி

மும்பை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் 2023-24 நிதியாண்டிலும் தொடர வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழுவின் சட்டபூர்வ அறிக்கையான 2022-23-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை இன்று (மே 30) வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "நாட்டின் மிகப் பெரிய பொருளாதார கொள்கைகள், பொருட்களின் மிதமான விலை, வலுவான நிதித் துறை, ஆரோக்கியமான பெருநிறுவன துறை, நிதிக் கொள்கையை வலுப்படுத்தும் நோக்கிலான அரசின் தரமான செலவினங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் மறுசீரமைப்பிலிருந்து உருவாகும் புதிய வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றின் பின்னணிகளைக் கருத்தில் கொண்டால் இந்தியாவின் வளர்ச்சி வேகம் கூடும். 2023-24-ம் ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்கும் சூழல் ஏற்படாது.

நாணய மாற்று விகிதம் இதேபோல் நிலையாக இருந்து, பருவமழையும் வழக்கம்போல் இருந்து, புவி வெப்ப பாதிப்பு இல்லாதிருக்குமானால் 2023-24-ல் பணவீக்கம் குறையக்கூடும். 2023-24-ல் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என கடந்த ஆண்டு கணிக்கப்பட்டது. அது 5.2 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை, பணவீக்கம் படிப்படியாக குறைவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் அது ஆதரிக்கிறது.

அதேநேரத்தில், சர்வதேச அளவில் நிச்சயமற்ற நிலை நீடிப்பதால் அந்நிய முதலீடுகள் குறையலாம். மேலும், சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைவு, நீடித்த புவிசார் அரசியல் பதற்றம், சர்வதேச அளவில் நிதி அமைப்பில் ஏற்படும் புதிய அழுத்தம், நிதிச்சந்தையின் அதிகப்படியான ஏற்ற இறக்கம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சவால்களாக இருக்கக்கூடும்" என்று ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x