Published : 26 May 2023 09:42 AM
Last Updated : 26 May 2023 09:42 AM
புதுடெல்லி: இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக அவற்றின் மாதிரிகளை ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தி தரத்தை உறுதிப்படுத்துவது கட்டாயம் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) கூறியுள்ளது.
இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1-ம் தேதியிலிருந்து தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக அரசு ஆய்வகங்களில் அவற்றை உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். அதன்பிறகு, அந்த ஆய்வகங்கள் வழங்கும் பகுப்பாய்வு சான்றிதழை ஏற்றுமதியாளர்கள் இருமல் மருந்து ஏற்றுமதியின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே, மருந்து உற்பத்தியாளர்கள் வழங்கும் அதுபோன்ற மாதிரிகளை குறிப்பிட்ட மாநில ஆய்வகங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசோதித்து விரைவாக சான்றிதழ் அளிக்க வேண்டும். அதில் தாமத நடவடிக்கைகள் கூடாது என டிசிஜிஐ வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்டமாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மத்திய ஆய்வகங்களுக்கு டிசிஜிஐ கடிதம் எழுதியுள்ளது. அதில், இருமல் மருந்து ஏற்றுமதி கொள்கை தொடர்பாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடு முதல் குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட நாடு வரையில் அந்தந்த நாடுகளுக்கு தேவையான மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
உலகளவில் ஜெனரிக் மருந்துகளை தயாரித்து வழங்குவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. பல்வேறு தடுப்பூசிகளுக்கான உலகளாவிய தேவையில் 50 சதவீதத்தையும், அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கான தேவையில் 40 சதவீதத்தையும், இங்கிலாந்தில் அனைத்து மருந்துகளுக்கான தேவையில் 25 சதவீதத்தையும் இந்திய மருந்து நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன.
கடந்த ஆண்டு காம்பியாவில் 66 சிறுவர்களும், உஸ்பெகிஸ்தானில் 18 சிறுவர்களும் உயிரிழந்ததுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், ஏற்றுமதிக்கு முன்பு தரத்தை உறுதி செய்ய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2021-22-ல் ரூ.1.40 லட்சம் கோடியாக இருந்த இருமல் மருந்து ஏற்றுமதி 2022-23-ல் ரூ.1.45 லட்சம் கோடியாக வளர்ச்சி கண்டது. உலக அளவில் மருந்து உற்பத்தியில் இந்தியா அளவின் அடிப்படையில் 3 வது இடத்தையும், மதிப்பின் அடிப்படையில் 14-வது இடத்தையும் பிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT